பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி, இனிப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட மாட்டாது என்று அணியின் தலைமை பயிற்சியாளரும் மற்றும் தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், சரியாக தங்கள் உடற்திறனை பேணிக்காப்பதில்லை. தவறான உணவு பழக்கவழக்கங்களால், அதிக உடற்எடை அடைந்து உடற்பருமன் ஆகிவிடுகின்றனர். இதன்காரணமாக, அவர்களால், போட்டிகளில் சரிவர விளையாட முடிவதில்லை. இதனால், நாம் பின்தங்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் மற்றும் தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக், கிரிக்கெட் வீரர்களுக்கான உணவுத்திட்டமுறையை வகுத்துள்ளார். அதன்படி வீரர்களுக்கு இனி பிரியாணி, இனிப்பு மற்றும் இறைச்சி வகைகள் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் இடம்பெறாது.
அதற்குப்பதிலாக, அவர்களுக்கு லேசான தீயில் வாட்டிய இறைச்சிகள், அதிகளவில் பழங்கள் நிறைந்த உணவு மெனுவே பின்பற்றப்படும். இந்த உணவு முறை, எல்லா வகையான டொமஸ்டிக் சீசன் மற்றும் தேசிய அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு கட்டாயம் பின்பற்றப்படும் என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்கள், பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளை அதிகம் உண்கின்றனர். அதில் உள்ள மிதமிஞ்சிய கலோரியால், அவர்களின் உடல் எடை தாறுமாறாக எகிறிவிடுகிறது. சரியான உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால், அவர்களால் போட்டிகளில் சிறந்த முறையில் விளையாட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தவிர்க்கவே, புதிய டயட் பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் தேசிய அணிக்காக 43 வயது வரை விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிட்னெசில் பல வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்த மிஸ்பா, தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராக உயர்ந்துள்ளார்.