worldcup 2023 | pakistan-vs-bangladesh | babar-azam | kolkata: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
சொமேட்டோவில் ஆர்டர்
இந்நிலையில், இந்தப் போட்டிக்கு முன்னதாக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் வழங்கப்படும் இரவு உணவை தவித்துள்ளனர். அதற்கு பதிலாக உணவு ஆர்டர் செய்யும் செயலியான சொமேட்டோ மூலம் இரவு உணவை ஆர்டர் செய்து உட்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் கொல்கத்தாவின் புகழ்பெற்ற 'ஜாம் ஜாம்' உணவகத்தில் இருந்து பிரியாணி, கபாப் மற்றும் சாப் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் ஏன் நட்சத்திர ஓட்டலில் வழங்கப்படும் உணவைத் தவிர்த்தார்கள் எனப்தற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை.
'ஜாம் ஜாம்' உணவகத்தின் இயக்குனர் ஷத்மன் ஃபைஸ் பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடமிருந்து ஆர்டர் வந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும், பின்னர் அதைப் பற்றி தங்களுக்கு தெரிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
"ஆன்லைன் உணவு விநியோக தளம் மூலம் ஆர்டர் வந்தது. பிரியாணி, கபாப் மற்றும் சாப் என மூன்று உணவுகளை ஆர்டர் செய்தனர். ஞாயிறு மாலை 7 மணிக்குப் பிறகு ஆர்டர் செய்தனர். ஆரம்பத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆர்டர் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் பின்னர் எங்களுக்குத் தெரிந்தது.
அவர்கள் எங்களது உணவை விரும்பி இருப்பார்கள் என்று நம்புகிறோம். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மக்கள் வந்து எங்கள் உணவை முயற்சிக்க வேண்டும். கொல்கத்தாவுக்கு என அதன் பாணியில் பிரியாணி உள்ளது. இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது" என்று அவர் கூறினார்.
அண்மையில் பாகிஸ்தான் அணி ஆபகானிஸ்தான் அணிக்கு எதிராக படுதோல்வி கண்டது. அப்போது அந்த அணி வீரர்களின் உணவுப் பழக்கம் குறித்து முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கடுமையாக சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.