Pakistan national cricket team India for World Cup Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதற்கு முன்னதாக நடக்கவுள்ள ஆசியக் கோப்பைக்கான முட்டுக்கட்டை முடிவுக்கு வந்துள்ளது. அதனால், பாகிஸ்தான் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
மறுப்பு
பாகிஸ்தான் அணியின் அதன் முதல் இரண்டு தகுதிச் சுற்று போட்டிகளை அக்டோபர் 6 மற்றும் 12 தேதிகளில் ஐதராபாத்தில் விளையாடுகிறது. அந்த அணி விளையாடும் மற்ற மைதானங்களாக சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அகமதாபாத் உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சென்னை மற்றும் பெங்களூரு மைதானங்களில் விளையாட விரும்பவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி சென்னையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், பெங்களூருவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. சுழலுக்கு உகந்த சென்னையில் ஆப்கானிஸ்தானை விளையாடுவது என்பது ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய ஆப்கான் வீரர்களான ரஷித் கான் மற்றும் நூர் அகமது போன்றவர்களை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும் என பாகிஸ்தான் நினைக்கிறது. ஆனால், பேட்டிங்கிற்கு அதிகம் உதவும் பெங்களூருவின் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவை விளையாட பாகிஸ்தான் ஏன் தயக்கம் காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.
கோரிக்கை
முன்னதாக, உலகக் கோப்பை அட்டவணையை அறிவிப்பை வெளியிடும் முன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உள்ளிட்ட மற்ற வாரியங்களுக்கு முன்மொழியப்பட்ட பயணத் திட்டம் குறித்த பரிந்துரைகளைக் கேட்டுள்ளது. அதற்கு பாகிஸ்தான் வாரியத்தின் தரப்பில், 'போட்டிகளை நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ தற்காலிகமாக திட்டமிட்டுள்ள இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி பாகிஸ்தான் வாரியத்தின் தரவு, பகுப்பாய்வு மற்றும் குழு மூலோபாய நிபுணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும்,
தேர்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் அளித்த அறிக்கையின் படி, சென்னையில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் விளையாடுவது மற்றும் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவை விளையாடுவது போன்றவற்றில் வசதியாக இல்லை என அவர்கள் கூறினர். அதனால் அணிக்கான தற்காலிக பயணத் திட்டத்தை வாரியம் திருப்பி அனுப்பியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்று ரீதியாகவும் புள்ளிவிவர ரீதியாகவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இடம் என்பதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சென்னையை ஏற்க வேண்டாம் என்று அணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தேர்வாளர்கள் வாரியத்திற்கு அறிவுறுத்தினர். பாகிஸ்தானின் போட்டிகளை மாற்றியமைத்து, ஆப்கானிஸ்தானை பெங்களூருவிலும், ஆஸ்திரேலியாவை சென்னையில் விளையாடவும் ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ-யை கேட்டுக்கொண்டுள்ளனர்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ விளக்கம்
இருப்பினும், ஐசிசி உறுப்பினர்களிடம் பயணத்திட்டம் குறித்த பரிந்துரைகளைக் கேட்பது ஒரு நெறிமுறை மட்டுமே என்றும், மைதானங்கள் மாற்றப்படுவதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"2016-ல் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குப் பயணம் செய்ததைப் போன்ற பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு அணி மைதான மாற்றத்தை வலியுறுத்தலாம். களத்தில் உங்கள் அணியின் பலம் மற்றும் பலவீனங்களுக்கு ஏற்ப ஒரு மைதானத்தின் மீது முன்பதிவு செய்யத் தொடங்கினால், அது அட்டவணையை இறுதி செய்வது மிகவும் கடினமாகிறது.
எனவே போதுமான வலுவான காரணம் இல்லாவிட்டால், மைதானங்களைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படாது," என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2016ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை போட்டி பாதுகாப்பு காரணமாக, தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.