2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இழுபறி
2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான துபாய்க்கு மாற்ற வேண்டும் என்று பி.சி.சி.ஐ.கேட்டுக்கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan drops PoK from trophy tour of Champions Trophy after BCCI files protest
ஆனால், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வரவில்லை என்றால் போட்டியை நடத்துவதை கைவிடுவதுடன், போட்டியில் இருந்து விலகுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுற்றுப்பயணம்
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தொடங்கவுள்ளது. நவம்பர் 16-ம் தேதி இஸ்லாமாபாத் நகரில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பயணம், பல்வேறு நகரங்களுக்கும் செல்லவுள்ளது. அதில் குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான ஸ்கார்டு, முர்ரி, மற்றும் முசாபராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்து.
ரத்து
இது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. தரப்பில் உடனடியாக ஐ.சி.சி. யிடம் முறையிடப்பட்டது. பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா நேரடியாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மீது புகார் கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு ஜெய் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பயணத்தை ரத்து செய்து ஐ.சி.சி அறிவித்தது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சுற்றுப்பயணத்தை கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று நகரங்களுடன் முடித்துக் கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) ஒப்புக்கொண்டதாக அறியப்படுகிறது.
"பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதை உறுதிசெய்ய கோப்பை சுற்றுப்பயணத்தை எவ்வாறு தொடரலாம் என்பது குறித்து பி.சி.பி ஏற்கனவே ஐ.சி.சி-யுடன் விவாதித்து வருகிறது. ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணம் ஐ.சி.சியின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் திட்டமிடப்பட்டது. கோப்பை சுற்றுப்பயண அட்டவணையை பி.சி.பி ஒருதலைப்பட்சமாக இறுதி செய்யவில்லை." என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர்.
ஜெய் ஷா புகார்
டிசம்பர் 1 ஆம் தேதி ஐ.சி.சி தலைவராக பதவியேற்க உள்ள ஜெய் ஷா, பி.சி.பி போகேவில் கோப்பை சுற்றுப்பயணத்தை திட்டமிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.சி.சி-யிடம் புகார் கூறியதாக பி.சி.சி.ஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"பி.சி.சி.ஐ செயலாளர் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை நடத்த பி.சி.பி-யின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் வேறு எந்த நகரத்திலோ அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வெளியே உள்ள மைதானத்திலோ அல்லது வணிக வளாகத்திலோ நடத்தப்பட்டாலும் பி.சி.சி.ஐ-க்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் அதை அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திட முடியாது, ”என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துக் கேட்க தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தரப்பில் ஐ.சி.சி-யை தொடர்பு கொண்ட நிலையில், எந்த வித கருத்தும் கிடைக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“