2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டியாக (50 ஓவர்) கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் அரங்கேறும் இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே நிகழும் அரசியல் பதற்றம் காரணமாக, இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் விலகக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்ததைத் தொடர்ந்து அதன் ஹோஸ்டிங் உரிமைகள் பறிக்கப்பட்டால். இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை ஐ.சி.சி அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நிறுத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் அரசாங்கம் கோர வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு இந்தியா பயணம் செய்யாது என்று மட்டுமே அறிவிக்கப்பட்டதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) ஐ.சி.சி-யிடம் விளக்கம் கேட்கும் என்று கூறியுள்ளது. "ஹைப்ரிட் மாடல் அமைப்பில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது பற்றி இப்போதைக்கு பேச்சு இல்லை" என்றும் பி.சி.பி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பையின் போது இந்தியாவின் போட்டிகள் இலங்கையிலும் மற்ற போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெற்ற போது, ஹைப்ரிட் மாடல் பின்பற்றப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“