9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தான் செல்லாது என மறுத்து விட்டது.
2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடாத நிலையில், ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகி வருகிறது.
இந்த சூழலில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் சில நிபந்தனைகளுடன் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்றும், இந்தியாவுக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
மேலும், 2024 - 2027 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும், தற்போது போன்றே அந்த தொடர்களிலும் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக ஐ.சி.சி. கூறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதும் மைதானம்
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் போட்டிகள் துபாய் அல்லது இலங்கையில் நடைபெறலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி), இந்தியாவின் போட்டிகளுக்கு நடுநிலையான இடம் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக "சாம்பியன்ஸ் டிராபிக்கு நடுநிலையான இடமாக துபாயை பாகிஸ்தான் தேர்வு செய்துள்ளது, மேலும் இது ஐ.சி.சி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியா தனது போட்டிகளை அங்கு விளையாடும் எனக் கூறப்பட்டுள்ளது" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று சர்வதேச மைதானங்கள் உள்ளன. இதில் எந்தெந்த மைதானங்களில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (இ.சி.பி) தலைவர் ஷேக்
முபாரக் அல் நஹ்யான் ஆலோசனை நடனத்தினர். இதனிடையே,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் வருகிற பிப்ரவரி 23-ல் நடைபெற வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், போட்டி அட்டவணை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ஐ.சி.சி-யால் அறிவிக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.