World Test Championship 2021-23 final; Scenarios for Team India Tamil News: பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணமாக சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கிய இத்தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத்தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி முதல் முல்தானில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்தது இங்கிலாந்து.
இந்த தொடர் வெற்றிகள் மூலம் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதுடன், தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. அடுத்ததாக, இவ்விரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி கராச்சியில் வருகிற புதன் கிழமை முதல் (டிசம்பர் 17) நடைபெற உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பாகிஸ்தான் தோல்வி இந்தியாவுக்கு சாதகம்; ஏன்?
இந்நிலையில், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியாவுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கையும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளன. இந்தியாவுக்கு இன்னும் மீதம் 6 போட்டிகள் உள்ளன. இதில் 2 போட்டிகள் வங்கதேசத்திலும், 4 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணிலும் விளையாட இருக்கிறது.
இந்த போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம். இதனால், நாளை முதல் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா களமாடவுள்ள தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இவை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளது. இதில் நிச்சயம் ஏதேனும் ஒரு அணி தோல்வியடையும். அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

இதன்பிறகு, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் அந்த அணி ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தால் வெளியேறிவிடும். எனவே, இதுவும் இந்தியாவுக்கு கூடுதல் சாதமாக இருக்கும்.
கடந்தாண்டில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் களமாட அணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அவ்வகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் அந்த 2 அணிகள் எது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil