கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்ட கடைசி பெரிய ஐ.சி.சி போட்டியானது 1996 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்திய உலகக் கோப்பை கிரிக்கெட் ஆகும். அதன்பிறகு, 2009-ம் ஆண்டு இலங்கை வந்திருந்த இலங்கை அணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் செல்ல தயங்கின. இதனால், பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இல்லாமல் போனது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 12,000 police officers and 9 charter flights: Here’s how Pakistan is preparing for ICC Champions Trophy 2025
அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க நாளான இன்று புதன்கிழமை கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செய்துள்ள தயாரிப்புகளை இங்குப் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. அந்நாட்டின் பஞ்சாப் காவல்துறை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் பாதுகாப்பை கவனித்துக் கொள்ள உள்ளனர். பாகிஸ்தான் செய்தி நிறுவனமான ஜியோ டி.வி-யின் செய்தி அறிக்கையின்படி, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்த 12,000 போலீஸ் அதிகாரிகளும், பாதுகாப்பு பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
பிப்ரவரி 22, 26 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் லாகூரில் மூன்று போட்டிகளும், பிப்ரவரி 24, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டியில் மூன்று போட்டிகளும் நடத்தப்படும். இந்தப் போட்டிகளின் போது, மொத்தமாக 18 மூத்த அதிகாரிகள், 54 டி.எஸ்.பி-க்கள், 135 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 1,200 மேல்நிலை போலீஸ் அதிகாரிகள் பணியில் இருப்பர். மேலும், 10,556 காவலர்கள் மற்றும் 200 -க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு மற்றும் சோதனை பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
9 சார்ட்டர் விமானங்கள்
பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர, பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ) ரசிகர்களுக்காக சிறப்பு சார்ட்டர் விமானங்களை அறிவித்துள்ளது.
இந்தத் தொடரின் போது கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் இடையே இரசிகர்கள் மற்றும் அணிகள் ஆகியோரின் சுமூகமான போக்குவரத்திற்காக ஒன்பது சிறப்பு சார்ட்டர் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் கலாச்சாரத்தையும் பி.ஐ.ஏ வெளிப்படுத்தும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பது குறித்து கேள்விகள் இருந்தபோதிலும், மிரட்டலான பாதுகாப்பு மற்றும் நெரிசல் இல்லாத போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து பாகிஸ்தான் கவனம் ஈர்த்துள்ளது.