worldcup 2023 | pakistan | babar-azam: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில், நாளை புதன்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
உலகக் கோப்பை தோல்வி
இந்நிலையில், இந்த தொடரில் களமாடிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆடிய 9 போட்டிகளில் 4ல் மட்டும் வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது. தொடர் தொடங்குவதற்கு முன்னர் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. பாகிஸ்தானின் இந்த தோல்வி அந்த அணியில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, வீரர்கள் விலகல், பயிற்சியாளர்கள் இருக்கும் என கணிக்கப்பட்டது.
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் விலகல்
அந்த வகையில், பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தானின் பிரபல செய்தி சேனலான சமா டிவி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பி.சி.பி) தலைவர் ஜகா அஷ்ரப், முன்னாள் கேப்டன் யூனிஸ் கானுடன் இன்று செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தி முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் 9 லீக் ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்து அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறிய பாகிஸ்தானின் மோசமான ஆட்டத்தை போட்டியில் மதிப்பாய்வு செய்ய வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக இரண்டாவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையில் கூட கால் இறுதியிலேயே வெளியேறியது.
வெகு காலத்திற்கு முன்பு ஒருநாள் தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருந்த பாகிஸ்தான், இந்த ஆண்டு ஆசியக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறியது. இரண்டு முக்கியமான பல நாடுகளின் போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடக்கவிருக்கும் பெரும் மாற்றங்களுக்கு மிகப்பெரிய காரணம் என்று நம்பப்படுகிறது.
மோர்னே மோர்கலுக்குப் பதில் உமர் குல்
பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உமர் குல் தற்போது குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராகவும் உள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன் பதவியில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“