2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவின் ஆட்டங்களை துபாய் போன்ற நடுநிலையான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய்க்கு மாற்ற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் அதன் கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டதாக அறியப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan unwilling to move Champions Trophy games out, questions India refusal to play there
"சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தானை தவிர்த்து மற்ற நாடுகளில் நடத்த வேண்டாம் என்று எங்கள் அரசாங்கம் எங்களிடம் கூறியுள்ளது, நேரம் வரும்போது அதுவே எங்களது நிலைப்பாடாக இருக்கும். தற்போது, இந்தியாவின் முடிவு குறித்து ஐ.சி.சி எங்களுக்குத் தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கான ஹோஸ்டிங் உரிமைகள் எங்களிடம் உள்ளன. எனவே நாங்கள் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாட்டுகளை நகர்த்த முடியாது, ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பி.சி.பி) அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.சி.சி-க்கு பி.சி.பி அளித்த பதில் குறித்து அந்த அதிகாரி பேசுகையில், “ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கு பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்ற பி.சி.சி.ஐ-யின் முடிவிற்கான விளக்கங்களைக் கோரி கடந்த வார ஐ.சி.சி கடிதத்திற்கு நாங்கள் பதிலளித்தோம். பி.சி.சி.ஐ-யின் முடிவிற்கான காரணங்களைக் கேட்டு அவர்களுக்கு கேள்விகளை அனுப்பியுள்ளோம். அதற்கான பதில் என்ன என்பதை அறிய இப்போது ஆவலாக உள்ளோம். எனவே இப்போதைக்கு, விளையாட்டுகளை நகர்த்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்று அவர் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி குறித்த பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம், கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய ஆசிய கோப்பை தொடரில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது தான். இந்த தொடருக்கு முன்பாக, செப்டம்பர் 2023 இல், பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது. அதேநேரத்தில் பாகிஸ்தானும் தொடரை எடுத்து நடத்தும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இருப்பினும், ஆசியக் கோப்பையின் தொடக்கத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக, பாகிஸ்தான் பின்வாங்கியது மற்றும் இந்தியாவின் ஆட்டங்கள் இலங்கைக்கு மாற்றப்பட்டன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகள், இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இரு நாடுகளும் 2013 முதல் ஐ.சி.சி நடத்தாத போட்டிகளில் விளையாடவில்லை, மேலும் இந்தியா கடைசியாக பாகிஸ்தானுக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு தான் பயணம் செய்தது.
கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தையொட்டி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முஹம்மது இஷாக் டார் ஆகியோருக்கு இடையே சந்திப்பு நடைப்பெற்றது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் உறவு இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை எழுந்தது. 2015-க்குப் பிறகு இந்த அளவில் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் முதல் நேரடி உரையாடல் இதுவாகும்.
இருப்பினும், அக்டோபர் 16 ஆம் தேதி ஜெய்சங்கர் வருகைக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“