Worldcup | pakistan | netharlands | Pakistan vs Netherlands Live Score: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கியது. 10 அணிகள் களமாடியுள்ள இந்த தொடரில் அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அபார வெற்றியை ருசித்தது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Pakistan vs Netherlands Live Score, World Cup 2023
டாஸ் வென்ற நெதர்லாந்து பவுலிங்; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் - இமாம்-உல்-ஹக் ஜோடி களமிறங்கினர். இதில் ஃபக்கர் ஜமான் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு வந்த கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரியை மட்டும் விரட்டி 15 ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். சரியான தொடக்கம் கிடைக்காமல் தடுமாறி வந்த தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முகமது ரிஸ்வானுடன் சவுத் ஷகீல் ஜோடி அமைக்க, இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து மிரட்டினர். எனினும், சவுத் ஷகீல் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதேபோல் அவருடன் நீண்ட நேரம் ஜோடியில் இருந்த முகமது ரிஸ்வானும் 68 ரன்னில் அவுட் ஆகி வெளியறினார். பின்னர் வந்த வீரர்களில் முகமது நவாஸ் 39 ரன்களுக்கும், ஷதாப் கான் 32 ரன்களுக்கும் அவுட் ஆகினர்.
ஒருபக்கம் ரன்கள் சேர்க்கப்பட்டாலும் நெதர்லாந்து அணி தீவிரமாக பந்துவீசியது. பாகிஸ்தானின் முக்கிய விக்கெட்டுகளை சொற்ப ரன்னில் கழற்றியதுடன் அந்த அணியை ஆல்-அவுட் செய்தது. 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 286 ரன்கள் சேர்த்தது. இதனால் நெதர்லாந்து அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளையும், கொலின் அக்கர்மேன் 2 விக்கெட்டுகளையும், ஆர்யன் தட், லோகன் வான் பீக், பால் வான் மீகெரென் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
287 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில், விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 5.5 ஓவர்களில் 28 ரன்களை எட்டியபோது மேக்ஸ் ஓடவுன், 5 ரன்களில் ஹாசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கோலின் அக்ரோமன் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக நெதர்லாந்து அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்த நிலையில், 21 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த கோலின் அக்ரோமன் இப்திகார் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு விக்ரம்ஜித் சிங்குடன் இணைந்த பாஸ்டி லீடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களின் ஆட்டத்தால் நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி சீராக பயணித்தது. தொடக்கம் முதலே ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடி அசத்திய விக்ரம்ஜித் சிங், 65 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
67 பந்துகளை சந்தித்த விகரம்ஜித் சிங் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் குவித்து ஷதாப் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய பாஸ்டி லீடி 41 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தேஜ நிடமானரு 5 ரன்களில் ஹாரிஸ் ரூப் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் 2 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். 27-வது ஓவரை வீசிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹெரிஸ் ரூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனிடையே சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பாஸ் டி லீடி, 68 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து நவாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுல்ஃபிகூர் 10 ரன்களிலும், வான்டர் மார்வி 4 ரன்களிலும், ஆர்யன் தத் 1 ரன்னிலும் பவுல் வா மிகிரன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடைசி வரை களத்தில் இருந்த லாகன் வான்பிக் 28 பந்துகளில் 28 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இதன் மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் ரூப் 3 விக்கெட்டுகளும், ஹாசன் அலி 2 விக்கெட்டுகளும், அப்ரிடி, இப்திகார், நவாஸ், ஷதாப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
நெதர்லாந்து
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீடே, தேஜா நிடமானுரு, சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.
பாகிஸ்தான்
இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் 'ஸ்விங்' தாக்குதலில் ஷகீன் ஷா அப்ரிடி அச்சுறுத்துவார். அவருடன் ஹசன் அலி, ஹரிஸ் ரவுப் பந்து வீச்சில் மிரட்ட காத்திருக்கிறார்கள். முகமது நவாஸ், ஷதாப் கான் சுழல் தாக்குதல் தொடுப்பார்கள்.
மறுபுறம், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி ஸ்காட்லாந்தை வீழ்த்திய, இலங்கைக்கு அடுத்தபடியாக தகுதிச் சுற்றுகளில் இரண்டாவது சிறந்த அணியாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றது. அந்த அணியின் தேஜா நிதாமனுரு, லோகன் வான் பீக், பாஸ் டி லீட், வான்டெர் மெர்வ் உள்ளிட்டோர் அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ஏதாவது பெரிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகும் நெதர்லாந்து, முடிந்த வரை கடும் சவால் அளிக்கும்.
நேருக்கு நேர்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 6 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி கண்டுள்ளது.
மழை வாய்ப்பு எப்படி?
ஐதராபாத்தில் பயிற்சி ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டது. ஆனால் இன்றைய நாளில் மழை ஆபத்து இல்லை. வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.