worldcup 2023| pakistan-vs-south-africa: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 26வது போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan vs South Africa Live Score, World Cup 2023
டாஸ் வென்ற பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் - இமாம்-உல்-ஹக் ஜோடி களமிறங்கிய நிலையில், ஒரு பவுண்டரியை விரட்டிய அப்துல்லா ஷபீக் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இமாம்-உல்-ஹக் 12 ரன்னுக்கு அவுட் ஆனார். 10 ஓவர்களுக்கு மேல் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடியில், 4 பவுண்டரி 1 சிக்ஸரை விளாசிய முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில், ஜெரால்ட் கோட்ஸி வீசிய 15.5வது ஓவரில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் கேப்டன் பாபர் அசாம் உடன் இப்திகார் அகமது ஜோடி சேர்ந்த நிலையில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டி 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த பாபர் அசாம் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், 50 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரிலே ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சவுத் ஷகீல் - ஷதாப் கான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இதில் நிதானமாக விளையாடிய சவுத் ஷகீல் அரைசதம் 52 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 52 குறித்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஷதாப் கான் அரைசதத்தை நெருங்கிய நிலையில், 36 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 43 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அடுத்து வந்த முகமது நவாஸ் 24 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹாரிஷ் ரவுஃப் ரன் கணக்கை தொடங்காமல் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்ஷி 4 விக்கெட்டுகளும், ஜென்சன் 3 விக்கெட்டுகளும், கட்டசி 2 விக்கெட்டுகளும், நிகிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் கேப்டன் பவுமா, டிகாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த உலககோப்பை தொடரில் 3 சதங்கள் விளாசி ரன் குவிப்பில் முதலிடம் பிடித்துள்ள டிகாக் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 14 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வான்டர் டூசன் நிதானமாக விளையாடிய நிலையில், கேப்டன் பவுமா 27 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் குவித்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்க்ரம் அதிரடியாக விளையாடி, வான்டர் டூசன் 39 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து களமிறங்கிய க்ளாசன் 10 பந்துகளில் 12 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டேவிட் மில்லர் 33 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 29 ரன்களும், மார்க்கோ ஜென்சன் 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய மார்க்ரம் 93 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 250 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. 9-வது விக்கெட்டுக்கு இணைந்த கேசவ் மகராஜ் – நிகிடி ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல கடுமையாக போராடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தது. இதில் நிகிடி 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த அடுத்து வந்த ஷம்ஷி கேசவ் மகராஜூடன் ஜோடி சேர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். கடைசி ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற உற்சாகத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, 48-வது ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த கேசவ் மகராஜ் பாகிஸ்தான் அணியின் உற்சாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
47.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி என்கிடி.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், ஷதாப் கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்ரிக்கா 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். மறுபுறம், 5ல் 2 போட்டிகளில் மட்டுமே வென்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. அந்த அணி மீதமுள்ள 4 போட்டிகளிலும் அவசியம் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட வாய்ப்பு குறைந்துவிடும். அதனால் இன்றைய ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 82 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 51-ல் தென்ஆப்பிரிக்காவும், 30-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக்கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.