Pakistan Vs Srilanka | sports | cricket: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதனை முடிவு செய்யும் மாதிரி அரைஇறுதிப் போட்டி நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இதில், நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் மோதின.
ஆங்கிலத்தில் படிக்க:- Pakistan vs Sri Lanka Live Score, Asia Cup 2023
வெளுத்து வாங்கிய மழை: 5 ஓவர்கள் குறைப்பு
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் கொழும்பில் கனமழை பெய்தது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மழை நின்று விட்டதால் மாலை 5 மணிக்கு டாஸ் போடப்பட்டது. 5 ஓவர்கள் குறைப்பட்டு 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடந்தது . முதல் பவர்பிளே 9 ஓவர்களுக்குப் பிறகும், 2வது மற்றும் 3வது பவர்பிளே 27 ஓவர்கள் மற்றும் கடைசி 9 ஓவர்களுக்கும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
டாஸ் வென்ற பாக்,. பேட்டிங் - இலங்கை பவுலிங்
இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் - பஹர் ஜமான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பஹர் ஜமான் 4 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 29 ரன்னிலும், அப்துல்லா ஷபிக் 52 ரன்னிலும், முகமது ஹாரிஸ் 3 ரன்னிலும், முகமது நவாஸ் 12 ரன்னிலும் வெளியேறினர்.
பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 130 ரன்களுடன் தள்ளாடிய சூழலில், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும், இப்திகர் அகமதுவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த தருணத்தில் மழையால் மேலும் அரைமணி நேரம் ஆட்டம் தடைபட்டதால், போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர், 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு சற்று மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த இலக்கை விரட்டிய இலங்கை அணியில் குசல் பெரேரா 17 ரன்னிலும், நிசாங்கா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு குசல் மென்டிசும், சமரவிக்ரமாவும் ஜோடி அணிக்கு வலுவான ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை உடைக்க பாகிஸ்தான் திணறியது. இறுதியில், இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
பாகிஸ்தான்
ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஜமான் கான்.
இலங்கை:
பாதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், மதீஷா பத்திரன
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.