T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Babar Azam’s Pakistan will need favour from Team India to qualify for T20 World Cup Super 8 stage
இந்த அணிகள் தங்கள் பிரிவு இருக்கும் அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில், நான்கு பிரிவுகளில் இருந்து இரண்டு அணிகள் மட்டுமே அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும். அரை இறுதியில் வென்ற அணிகள் ஜூலை 29 அன்று அரங்கேறும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டுவார்கள்.
பாகிஸ்தானுக்கு பின்னடைவு
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதனால், தோல்வியடைந்த பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த அணி நடப்பு தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு இந்தியா உதவ வேண்டிய சூழல் நிலவுகிறது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 2 போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான் இரண்டிலும் தோல்வியடைந்தது. இதனால், குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற, கனடா மற்றும் அயர்லாந்திற்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகளை பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அத்துடன் இந்தியாவும், அயர்லாந்து அணியும் அமெரிக்காவை வீழ்த்த வேண்டும் என்று நம்ப வேண்டும்.
சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் எப்படி தகுதி பெறலாம்:-
🔴 கனடா vs பாகிஸ்தான் (ஜூன் 11): நியூயார்க்கில் கனடாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
🔴 அமெரிக்கா vs இந்தியா (ஜூன் 12): அமெரிக்க அணியை இந்தியா தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் நெட் ரன்ரேட்டைக் குறையும் வகையில் அவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் நம்ப வேண்டும்.
🔴 அமெரிக்கா vs அயர்லாந்து (ஜூன் 14): அயர்லாந்தின் வெற்றிக்காக பாகிஸ்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
🔴 கனடா vs இந்தியா (ஜூன் 15): இந்தப் போட்டியில் இந்தியா கனடாவை வீழ்த்திட வேண்டும்.
🔴 அயர்லாந்து vs பாகிஸ்தான் (ஜூன் 16): மேற்குறிப்பிட்ட முடிவுகள் அதற்கேற்ப அமையுமானால், பாகிஸ்தான் அயர்லாந்தை உறுதியாக வீழ்த்த வேண்டும்.
இந்தியாவின் நிலை என்ன?
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி குரூப் ஏ-பிரிவில் 4 புள்ளிகள் மற்றும் +1.455 நெட் ரன் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.