/indian-express-tamil/media/media_files/44YJTCtpQGbNP3hbcs7D.jpg)
"விளையாட்டு வீரர்களாகிய உங்களில் யாராவது மாற்றுத்திறனாளிகளுக்காக பொறுப்பான சமூக சேவை செய்திருந்தால், நீங்கள் அனைவரும் இந்த ரீல்ஸை எடுத்திருக்க மாட்டீர்கள்" என்று இந்திய பாரா பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷி கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 157 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்தியா 19.1-வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அணி பட்டம் வென்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக வென்ற இந்தியா முன்னாள் வீரர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டு இருந்தனர். அதில் 'தௌபா தௌபா' என்கிற பாடலுக்கு ஏற்ப நொண்டி நொண்டி வருவது போன்ற ஸ்டெப்களை போட்டு அவர்கள் வந்தனர். ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோவுக்கு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் இந்திய பாரா பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷி. மேலும் அவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்.
இந்த வீடியோ கமெண்டில் பதிவிட்டுள்ள இந்திய பாரா பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷி, "நட்சத்திர வீரர்களாகிய உங்களிடமிருந்து அதிக பொறுப்பை எதிர்பார்க்கிறோம். குறைபாடுகள் உள்ளவர்களின் நடை முறைகளை கேலி செய்யாதீர்கள். இது வேடிக்கையானது அல்ல.
உங்கள் நடத்தை எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. சுற்றியிருப்பவர்களிடம் இருந்து நீங்கள் பெறும் பாராட்டுகள் பார்க்கவே திகைப்பாக இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் நடை முறைகளை கொஞ்ச நேர சிரிப்புக்காக கேலி செய்வது சரிதான் என்கிற கருத்தை உங்களின் இந்த ரீல் ஊக்கப்படுத்தப் போகிறது. இந்த ரீலைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக குறைபாடுகள் உள்ள இளம் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவார்கள்.
விளையாட்டு வீரர்களாகிய உங்களில் யாராவது மாற்றுத்திறனாளிகளுக்காக பொறுப்பான சமூக சேவை செய்திருந்தால், நீங்கள் அனைவரும் இந்த ரீல்ஸை எடுத்திருக்க மாட்டீர்கள். இந்த விளையாட்டு வீரர்களின் பி.ஆர் ஏஜென்சிகள் பொதுத் தளத்தில் இந்த ரீல்ஸை எப்படி அங்கீகரித்தன என்று நான் அஞ்சுகிறேன்.
ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அத்துடன் இந்த ரீல்ஸை ஆதரித்து கமெண்ட்ஸ் செய்யும் உங்களைப் பார்த்தும் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நடை முறைகளை நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் ஜாம்பவான் வீரர்கள் இல்லை. இது இந்தியாவில் ஊனமுற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செயல்.”என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள மானசி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2019 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை பாரிஸில் உள்ள போர்ட் டி லா சேப்பல் அரங்கில் நடைபெறவிருக்கும் பாரா பேட்மிண்டன் பாரா பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.