பாரிஸ் நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மாரியப்பன், தொடர்ச்சியாக 3 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உயரம் தாண்டுதல் ஆடவர் T63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டார். இந்தப் பிரிவில் அவருடன் மற்றொரு இந்திய வீரரான ஷரத்குமாரும் கலந்து கொண்டார்.
மாரியப்பன் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஷரத்குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். அமெரிக்க வீரர் ஏல்ரா 1.94 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.
உயரம் தாண்டுதல் ஆடவர் T63 பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் மாரியப்பன் தொடர்ச்சியாக 3 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 2016 ரியோ டி ஜெனீரோ பாராலிம்பிக்கில் தங்கம், 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி, இப்போது பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளார்.
இந்நிலையில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின், பா.ம.க. தலைவர் அன்புமணி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் தனது X பக்கத்தில், "மூன்றாவது முறையாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள்.
தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
"பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் மேலும், மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும்.
உலக அளவிலான போட்டிகளில் மேலும், மேலும் சாதனைகளை படைக்க மாரியப்பனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போட்டியில் 1.88 மீ. உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத் குமாருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“