33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் சுற்று-32 போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா (வயது 29) மற்றும் பிரான்சின் பிரிதிகா பவாடே விளையாடினர்.
இந்த போட்டியில், 4-0 என்ற புள்ளி கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) பிரிதிகாவை வீழ்த்தி மணிகா பத்ரா வெற்றி பெற்றார். இதற்கு முன் நடந்த சுற்று-64 போட்டியில், பிரிட்டனை சேர்ந்த அன்னா ஹர்சியை 11-8, 12-10, 11-9, 9-11, 11-5 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வீழ்த்தி அசத்தினார்.
வரலாறு படைத்த மணிகா பத்ரா
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவின் சுற்று-32 போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வென்றதன் மூலம், அடுத்த சுற்றான 16வது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். இதன் மூலம், ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 16வது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமை மணிகா பத்ரா பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
“பாரீஸ் நகரில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உயர் தரவரிசை வீராங்கனையை தோற்கடித்தேன். இது மூலம் சரித்திரம் படைத்து, முன் காலிறுதிக்கு முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, இன்னும் சுற்றுகள் உள்ளன, அதில் சிறப்பாக ஆடி எப்பொழுதும் செய்வது போல் சிறந்ததை வழங்குவேன்” என்று மணிகா பத்ரா கூறினார்.
மணிகா பத்ரா தனது 32-வது சுற்றில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக உலகின் 13வது இடத்தில் உள்ள ஜப்பானின் மியு ஹிரானோவை சந்திக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“