33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் 66 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் காலி இறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி - அல்ஜீரியாவின் இமான் கெலிஃப் மோதினர். பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் இமான் கெலிஃப், ஏஞ்சலா கரினி மூக்கில் குத்தினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Gender row erupts after Angela Carini abandons bout against Algerian Imane Khelif in 46 seconds
அதற்கு பதிலுக்கு குத்தாமல், போட்டி தொடங்கிய 46 வினாடிகளில் ஏஞ்சலா கரினி போட்டியை நிறுத்தினார். கெலிஃப் தன்னை குத்திய போது கடும் வலி ஏற்பட்டதாகவும், இதுவரை தனது குத்துச்சண்டை வாழ்வில் இப்படி ஒரு தாக்குதலை தான் எதிர்கொண்டதில்லை எனவும் கூறி, கெலிஃப் பெண் அல்ல எனவும் மறைமுகமாக குற்றம் சுமத்தி போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
கடந்த 2023 இந்தியாவில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதித் தேர்வில் அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் தோல்வியடைந்தார். இதேபோல், தைவான் வீராங்கனை லின் யூ-டிங்-கும் பாலின சோதனையில் தோல்வி அடைந்தார். அவர்கள் இருவரும் அந்த தொடரில் இருந்து பாதியில் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தற்போது பாலின சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்தப் போட்டியின் போது இமான் கெலிஃப் குத்தியதில் ஏஞ்சலா கரினிக்கு மூக்கு உடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பி.பி.சி மற்றும் தி டெலிகிராப் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. இத்தாலியின் நேபிள்ஸைச் சேர்ந்த 25 வயதான ஏஞ்சலா கரினி, இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் மனம் உடைந்துவிட்டேன். நான் ஒரு போர்வீரன் என்று என்னிடம் பல முறை கூறி வளர்க்கப்பட்டேன். ஆனால் என் உடல்நிலைக்காக நான் நிறுத்த விரும்பினேன். இப்படி ஒரு பஞ்ச் நான் என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. நான் சண்டையிட வளைய வந்தேன். நான் கைவிடவில்லை, ஆனால் ஒரு குத்து மிகவும் வலித்தது. அதனால், நான் தலையை உயர்த்திக் கொண்டு வெளியே செல்கிறேன்.
இது எனக்கு ஒரு தோல்வி அல்ல. இது நியாயமா அல்லது அநியாயமா என்று சொல்ல வேண்டியதில்லை. நான் என் வேலையை மட்டும் செய்தேன். தலையை நிமிர்த்திக் கொண்டு சமாளித்து வெளியேறினேன். நான் ஒரு முதிர்ந்த பெண், என்னால் தொடர முடியாது என்று நான் நினைக்கும் போது, அது விட்டுக்கொடுக்கவில்லை, போதுமானதாகச் சொல்லும் தகுதி அதற்கு இருக்கிறது. நான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக இருந்தேன், நான் கவனம் செலுத்தினேன், அமைதியாக இருந்தேன். ஆனால் இந்த குத்துகள் மூக்கில் வலிக்கிறது, நான் போதும் என்று சொன்னேன்." என்று அவர் கூறினார்.
இந்நிலையில், இமான் கெலிஃப்-ஐ மகளிர் பிரிவில் ஆட அனுமதித்தது தவறு என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இது தவறு என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இமான் கெலிஃப் மற்றும் தைவானின் லின் யூ-டிங் மீது நடத்தப்பட்ட சமூக வலை தளங்கள விமர்சனங்களுக்கும், கரினி விலகியதற்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/b39e35366f4c9cdc4f4739c1c785f04814e912afe9f7c3fbcdec6f9c83c50c25.jpg?resize=600,423)
இது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாஸ்போர்ட்டில் என்ன பாலினம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் தான் வீரர்களின் பாலினம் அடையாளம் காணப்படும்' என்று தெரிவித்துள்ளது. "ஒவ்வொரு நபருக்கும் பாரபட்சமின்றி விளையாட்ட உரிமை உண்டு. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் போட்டியின் தகுதி மற்றும் நுழைவு விதிமுறைகள் மற்றும் பாரிஸ் 2024 குத்துச்சண்டை பிரிவு வகுத்த அனைத்து மருத்துவ விதிமுறைகளுக்கும் இணங்கி இருக்கிறார்கள். முந்தைய ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே, விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டது.
இந்த இரண்டு விளையாட்டு வீரர்களும் சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் திடீர் மற்றும் தன்னிச்சையான முடிவால் பாதிக்கப்பட்டவர்கள். 2023 இல் சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் உலக சாம்பியன்ஷிப்பில், அவர்கள் எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“