பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த தொடரில், பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SU5 பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி, முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், அப்போட்டியில் வெற்றி பெற்ற துளசிமதி, தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நேற்று (செப்.2) நடைபெற்ற இறுதிப்போட்டியில், சீனாவை சேர்ந்த யாங் கியூஷியாவை எதிர்கொண்ட துளசிமதி முருகேசன், 17-21, 10-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மறுபுறம் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், டென்மார்க்கை சேர்ந்த கேத்ரின் ரோசன்கிரென்னை எதிர்கொண்ட மனிஷா ராமதாஸ், 21-12, 21-8 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SU5 பிரிவில், வெள்ளி மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
பதக்கம் வென்ற இரு வீராங்கனைகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்!
பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கு வாழ்த்துகள்! உங்கள் தைரியமும், மன உறுதியும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து பிரகாசியுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் மோடி வாழ்த்து
பாரா ஒலிம்பிக் 2024ல் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்று பெருமையின் ஒரு தருணம்! அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
பாரா ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்ல மனிஷா ராமதாஸின் முயற்சி சிறப்பானது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்த நம்பமுடியாத சாதனை சாத்தியமாகி இருக்கிறது.. வாழ்த்துக்கள்! என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“