பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில், இந்திய ஆக்கி அணி ஒலிம்பிக் ஆக்கி போட்டிகளில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10, 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 8-வது நாளான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20 நடைபெற்ற ஆக்கி போட்டியில், கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் பாதியிலேயே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து, இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய ஆக்கி அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், அபிஷேக் 1 கோலும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் தாமஸ் கிரெய்க் மற்றும் பிளேக் கவர்ஸ் தலா 1 கோல் அடித்தனர்.
1972-ம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, இந்தியா ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த காயத்திற்கு மருந்து போடும் வகையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலிய ஆக்கி அணியை வீழ்த்தியதன் மூலம், ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“