worldcup 2023 | india-vs-australia | pat-cummins: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. 1:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்த நிலையில், போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அப்போது, இந்திய அணியில் உள்ள 33 வயதான வீரரர் தான் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், "நாளை வரப்போகிற ரசிகர்கள் கூட்டம் நிச்சயம் ஒரு சார்பு கொண்டதாகவே இருக்கப் போகிறது. ஆனால் 1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுவாகத்தான் இருக்கும்.
இது வெளிப்படையாக இரண்டு அணிகளுக்கும் ஒன்றுதான். உங்கள் சொந்த விக்கெட்டில், உங்கள் சொந்த நாட்டில் விளையாடுவதில் சில நன்மைகள் உள்ளன.
இது ஒரு சமமான போட்டியாக இருக்கும். 2015ல் கோப்பை வென்ற எங்களது அணியில் 6-7 வீரர்கள் உள்ளனர். எனவே அவர்கள் அந்த உணர்வை அறிந்திருக்கிறார்கள். மேலும் தைரியமாக விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல பயப்பட மாட்டார்கள்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒரு பெரிய அச்சுறுத்தல். இந்தியா அனைத்திலும் பலமாக உள்ளது." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“