Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் தொடர் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த அணிகளில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து பலம் பொருந்திய அணியாக குஜராத் ஜெயன்ட்ஸ் வலம் வந்தது. அந்த அணியை கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்தில் வைத்து எதிகொண்டது பாட்னா பைரேட்ஸ். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 50 -28 என்கிற புள்ளிகள் கணக்கில் மண்ணைக் கவ்வ வைத்த பாட்னா குஜராத்தையும் புரட்டி எடுத்தது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 33-30 என 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தப் போட்டியில் 2 ரெய்டு, 1 டேக்கிள், 3 போனஸ் என 6 புள்ளிகளை அள்ளினார் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக களமாடும் தமிழகத்தைச் சேர்ந்த சுதாகர். அவரின் அறிமுக போட்டியிலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அவரை இந்த சீசனுக்கு முன்னதாகவே பாட்னா பைரேட்ஸ் அணி புதிய இளம் வீரர் (NYP) பட்டியலில் தேர்வு செய்து இருந்தது. அத்தகைய இளம் ரைடரான சுதாகரின் ஊக்கமளிக்கும் கபடி பயணத்தை இங்கு பார்க்கலாம்.
பழையநல்லூர் பாசப் பறவையின் கபடி பயணம்
சுதாகர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊரில் இருக்கும் பாசப் பறவை கபடி அணி தான் அவரின் கபடி பயணத்தில் தொடக்க புள்ளியாக அமைத்தது.
21 வயதான சுதாகர் கடந்த 2022ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் நடைபெற்ற யுவா கபடி தொடரில் தனது அசாத்திய ஆட்டத்தால் அனைவரது புருவங்களையும் உயரச் செய்தார். அத்துடன் அவரது அறிமுக அணியான பழனி டஸ்கர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த தொடரில் மொத்தமாக 28 போட்டிகளில் விளையாடி இருந்த அவர் 320 ரெய்டு புள்ளிகளுடன் போட்டியின் சிறந்த ரைடராக அறிவிக்கப்பட்டார். மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 77.10%, சராசரியாக ஒரு போட்டிக்கு 11.42 ரெய்டு புள்ளிகள், 13 சூப்பர் ரெய்டுகள் மற்றும் 18 சூப்பர் 10கள் என மிரட்டலான புள்ளிகளை சம்பாதித்தார்.
இருப்பினும், சுதாகரின் எழுச்சி எளிதானதாக இருக்கவில்லை. கபடி விளையாட போதுமான ஆதரவைப் பெற வேறு கல்லூரிக்கு மாற வேண்டியிருந்ததால் அவரது பாதை மிகக் கடினமானதாக இருந்தது. அவர் உடனடியாக பல்கலைக்கழக அணியில் இடம்பிடித்தார். அவரது அணி கல்லூரிகளுக்கு இடையேயான மற்றும் மண்டல போட்டிகளில் வென்றியை ருசித்தது.
சுதாகர் மிகச் சிறிய வயதிலிருந்தே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்காகவும், பின்னர் ஜூனியர் மாநில அணிக்காகவும் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். துரதிர்ஷ்டவசமாக, காயங்கள் ஆரம்ப நாட்களில் இருந்தே அவரது கபடி வாழ்க்கையில் தடையைக் கொண்டுவந்தது. இதனால் அவர் யுவ கபடி தொடருக்கான சோதனைப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
இருப்பினும், தமிழ்நாடு ஜூனியர் அணியைச் சேர்ந்த அவரது பயிற்சியாளர் சுதாகர் மீது நம்பிக்கை வைத்து, அவரை பழனி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுத்தார். போட்டியில் அவரது சிறப்பான ஆட்டம் இறுதியில் அவர் புரோ கபடி லீக்கில் நுழைவதற்கு வழி வகுத்தது.
யுவ கபடி தொடரில் தனது சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு சுதாகர் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் (Integral Coach Factory) நிறுவனத்திலும் வேலை பெற்றார். பிகேஎல் 10ல் விளையாடும் அபினேஷ் நடராஜன் மற்றும் சஜின் சந்திரசேகர் போன்ற வீரர்களும் ஐ.சி.எஃப் அணிக்காக விளையாடி வருகிறாரார்கள்.
ஜூனியர் ஸ்டேட் மற்றும் யுவ கபடி தொடரில் விளையாடி, இப்போது புரோ கபடி லீக்கில் இடம்பிடித்து அவரது மண்ணையும், மக்களையும் பெருமையடைச் செய்துள்ளார் சுதாகர். அவர் மென்மேலும் புள்ளிகளை அள்ளுவார் என நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.