Pro Kabaddi 2022 - Pawan Sherawat Injury Update Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையை மையாக கொண்டு உதயமாகியுள்ள தமிழ் தலைவாஸ் அணி களமாடி வருகிறது.
முதல் வெற்றியைப் பதிவு செய்த தமிழ் தலைவாஸ்
நடப்பு புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 31-31 என்ற கணக்கில் ஆட்டம் டிரா செய்தது. தொடர்ந்து ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வி கண்டது. இதன்பிறகு, பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 33-32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதுவரை, தமிழ் தலைவாஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் டை என 10 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
பவன் ஷெராவத் காயம்
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. பவன் குஜராத் வீரரை பிடிக்க முயன்றபோது அவரது வலது முழங்கால் அப்படியே மடங்கியது. இந்த பலத்த காயத்தால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர்.
இந்த சம்பவம் போட்டியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. மேலும் தமிழ் தலைவாஸ் அணியினர் அப்படியே உறைந்தனர். இதன்பிறகு அவரின் காயம் தொடர்பாக பேசி தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதய குமார், ‘பவன் இன்னும் 2-3 நாட்களில் அணிக்கு திரும்புவார்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பயிற்சியாளர் உதயகுமார் நம்பிக்கை
இந்நிலையில், பவன் ஷெராவத்தின் காயம் குறித்து பேசியுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் ஜெ உதயகுமார், பவன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகான பேசிய பயிற்சியாளர் ஜெ உதயகுமார், "பவன் ஷெராவத்தின் காயத்தின் அளவு குறித்து உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பவன் வீரர்களுடன் தொடர்பில் இருக்கிறார் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களை ஊக்குவிக்கிறார்." என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.