PBKS vs DC | Punjab Kings vs Delhi Capitals IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா நேற்று முதல் தொடங்கியுள்ளது. மே 26 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PBKS vs DC Live score, IPL 2024
இந்நிலையில், இந்த தொடரில் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி, பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 2-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் தேர்வு: டெல்லி பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கிய நிலையில், வார்னர் 29 ரன்னுக்கும், மார்ஷ் 20 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து வந்த ஷாய் ஹோப் 33 ரன்னில் அவுட் ஆனார். இதன்பிறகு ஜோடி அமைத்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ரிக்கி புய் ஜோடியில், பண்ட் 18 ரன்னிலும், ரிக்கி புய் 3 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்னில் அவுட் ஆகினர்.
இதன்பின்னர் வந்த அக்சர் படேல் மற்றும் சுமித் குமார் ஜோடி சேர்ந்தனர். இதில் அக்சர் 21 ரன்னிலும், சுமித் குமார் 2 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரிக்கி புய்க்கு பதிலாக இம்பேக் பிளேயராக களம் இறங்கிய அபிஷேக் போரெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பஞ்சாப் தரப்பில் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பஞ்சாப் பேட்டிங்
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். ஷிகர் தவான் 4 பவுண்டரிகள் அடித்தார். இருப்பினும் இஷாந்த் அவரை 22 ரன்களில் போல்டாக்கினார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் பவுண்டரிகளாக அடித்து ரன் சேர்த்தார். இதற்கிடையில் பேர்ஸ்டோ 9 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்து சாம் கரண் களமிறங்கிய நிலையில், பிரப்சிம்ரன் 26 ரன்களில் அவுட் ஆனார். அவர் குல்தீப் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் அவுட் ஆனார். அவர் குல்தீப் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது.
அடுத்து சாம் கரணுடன் ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். பவுண்டரிகளாக அடித்த சாம் கரண் அரை சதம் அடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 67 ரன்கள் சேர்த்த நிலையில், சாம் கரண் 63 ரன்களில் அவுட் ஆனார். அவர் கலீல் பந்தில் போல்டானார்.
அடுத்து வந்த ஷஷாங்க் டக் அவுட் ஆனார். அவர் கலீல் பந்தில் ரிஷ்ப் பண்டிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கி ஹர்பிரீத் 2 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் 2 வைடுகள் கிடைக்க, 2 ஆவது பந்தை லிவிங்ஸ்டன் சிக்சருக்கு விளாசினர்.
இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி தரப்பில் கலீல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்களையும், இஷாந்த் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்வீரர்கள் பட்டியல்
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வ), ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
இரு அணிகளின் இம்பேக்ட் வீரர்கள் பட்டியல்:
டெல்லி கேபிடல்ஸ்: அபிஷேக் போரல், முகேஷ் குமார், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், விக்கி ஓஸ்ட்வால், பிரவீன் துபே.
பஞ்சாப் கிங்ஸ்: ரிலீ ரோசோவ், பிரப்சிம்ரன் சிங், தனய் தியாகராஜன், ஹர்பிரீத் சிங் பாட்டியா, வித்வத் கவேரப்பா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.