IPL 2024 | Punjab Kings | Gujarat Titans: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே பஞ்சாப்பில் முல்லன்பூரில் உள்ள மஹாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் சாம் கரண் மற்றும் பிரப்சிம்ரன் சிங் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக பேட்டிங் செய்தார், மறுமுனையில் சாம் கரண் நிதானமாக விளையாடினார். பஞ்சாப் கிங்ஸ் அணி, 5.3 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது, 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்திருந்த பிரப்சிம்ரன் சிங், மோஹித் சர்மா பந்தில் விரித்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரிலீ ரொஸ்ஸோவ் பேட்டிங் செய்ய வந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, 6.6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தபோது, 7 பந்துகளில் 9 ரன்கள் அடித்திருந்த ரொஸ்ஸோவ் நூர் அஹமது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ஜிதேஷ் சர்மா பேட்டிங் செய்ய வந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, 7.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தபோது, 19 பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்த சாம் கரண் ரஷீத் கான் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து லயாம் லிவிங்ஸ்டோன் பேட்டிங் செய்ய வந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, 10.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது, 9 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே அடித்திருந்த லிவிங்ஸ்டோன், நூர் அஹமது பந்தில் ராகுல் திவாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷஷாங்க் சிங் பேட்டிங் செய்ய வந்தார்.
இதற்கு பிறகு, ஜிதேஷ் சர்மா 13 ரன்களிலும், ஷஷாங்க் சிங் 8 ரன்களிலும், அஷுதோஷ் சர்மா 3 ரன்களிலும் ஹர்பிரீத் சிங் பாட்டியா 14 ரன்களிலும், ஹர்ஷல் படேல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்பிரீத் பிரர் 12 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். ரபாடா கடைசிவை அவுட் ஆகாமல் இருந்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 142 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், விரித்திமான் சஹா - சுப்மன் கில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். விரித்திமான் சஹா 13 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஹர்பிரீத் சிங் பந்தில், அஷுதோஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த சாய் சுதர்ஷன், சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்கள் விழுக்காட்டை உயர்த்தினர். இவர்களில், சுப்மன் கில் 35 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 31 ரன்களிலும், டேவிட் மில்லர் 4 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சார் 9 ரன்களிலும், ஷாருக்கான் 8 ரன்களிலும், ரஷீத் கான் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராகுல் திவாட்டியா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை நடந்த 7 போட்டிகளில் 2ல் வெற்றி, 5ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மறுபுறம், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் 7 போட்டிகளில் 3ல் வெற்றி 4ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
முந்தைய 3 போட்டிகளில் தோல்வியைக் கண்டு துவண்டுள்ள பஞ்சாப் உள்ளூரில் எழுச்சி பெறும் நம்பிக்கையுடன் களமாடும். இதேபோல், குஜராத் அணியும் வெற்றியைப் பெற்று பட்டியலில் முன்னேற நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் 2-ல் வெற்றியும், பஞ்சாப் 2-ல் வெற்றியும் பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.