/indian-express-tamil/media/media_files/2025/05/08/4hWu3KD8xueUjZqhgCQt.jpg)
போர் பதற்றம் காரணமாக தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் - மும்பை போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ யோசனை செய்து வருகிறது. அகமதாபாத் மைதானத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இதனிடையே, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
அதன்படி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது.
இந்நிலையில், மலைவாசஸ்தலமான தர்மசாலா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், ஐ.பி.எல் 2025 தொடரில் களமாடி வரும் அணிகளின் வீரர்கள் தர்மசாலாவிற்குவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 11 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் - மும்பை போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ யோசனை செய்து வருகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ-யிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததும், போட்டியை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.