Punjab Kings vs Rajasthan Royals IPL 2024:17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு சண்டிகரில் உள்ள முல்லாப்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PBKS vs RR LIVE Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் இல்லாததால் சாம் கரண் கேப்டன் பொறுப்பேற்றார். இதனால் ஜானி பேர்ஸ்டோவுடன் தொடக்க வீரராக ஆதித்யா தாய்டே களமிறங்கினார். இதுவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தாய்டே, பேர்ஸ்டோ ஆகிய இருவருமே தலா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த, பிரப்சிம்ரன் 10 ரன்களுக்கும், சாம்கரன் 6 ரன்களுக்கும், ஆட்டமிழந்த நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்த ஜித்தேஷ் சர்மா 24 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 9 ரன்களில் வீழ்ந்தார்.
அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 14 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அஷூதஷ் சர்மா 16 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியில் இவர் எடுத்த ரன்னே ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னாகும்.
ராஜஸ்தான் அணி தரப்பில், ஆவேஷ் கான் கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாஹல், குல்தீப் சென், போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 149 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு கொட்டியன் – ஜெயஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்து அசத்தியது. மந்தமாக விளையாடிய கொட்டியன் 31 பந்துகளில் 24 ரன்கள் குவித்து வெளியேறிய நிலையில், ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் சஞ்சு சாம்சன், 14 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 18 ரன்களும், ரியான் பராக் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்களும், துருவ் ஜோரல் 6 ரன்களிம் ஆட்டமிழந்த நிலையில், ரோவன் பவல் 11, கேசவ் மகராஜ் ஒரு ரன் என அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதனால் ஆட்டம் இரு அணிகளுக்கும் சாதகமாக அமைந்த நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
அர்ஷ்தீப் சிங் வீசிய இந்த ஓவரின் முதல் இரு பந்துகளில் ரன்கள் இல்லை. ஆனாலும் 3-வது பந்தில் ஹெட்மயர் சிக்சர் அடித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். இதனால் அடுத்த 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த ஹெட்மயர் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். 10 பந்துகளை சந்தித்த ஹெட்மயர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
19.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்க்ள எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, சாம்கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், லிவிங்ஸ்டன், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.