PBKS vs SRH, Punjab Kings | Sunrisers Hyderabad | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PBKS vs SRH Live Score, IPL 2024
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, டிரடிவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் சுமாரான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி 27 ரன்கள் சேர்த்தபோது, ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய ஆர்ஷ்தீப் சிங் இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரின் 2-வது பந்தில், டிராவிஸ் செட் (16) 4-வது பந்தில் மார்க்ரம் (0) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
அடுத்து 5-வது ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஐதராபாத் அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நித்தீஷ் ரெட்டி, ஒருபுறம் அதிரடியாக விளையாட மறுமுனையில், ராகுல் திரிபாதி 11 ரன்களுக்கும், க்ளாசன் 9 ரன்களுக்கும் வெளியேறினர். சிறிது நேரம் நித்தீஷ் ரெட்டிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அப்துல் சமத் 12 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 25 ரன்கள் குவித்து வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய நித்தீஷ் ரெட்டி அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 34 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஷபாஸ் அகமது 7 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும், கடைசி பந்தில் சிக்சர் அடித்த உனத்கட் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், சாம் கரன், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரபாடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
183 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜானி பேர்ஸ்டோ ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் 4 ரன்களுக்கும், ஷிகர் தவான் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதன்பிறகு களமிறங்கிய சாம்கரன் 22 பந்துகளில் 29 ரன்களும், சிக்கந்தர் ராசா 22 பந்துகளில் 28 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 15.3 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 27 பந்துகளில் 69 ரன்கள் தேவையாக இருந்தது.
இதனையடுத்து இறுதிக் கட்டத்தில் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் - அசுதோஷ் சர்மா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தனர். பரப்பரப்பாக சென்ற இந்த போட்டி இறுதி ஓவரை எட்டியது. வெற்றிக்கு போராடிய பஞ்சாப் இலக்கை நெருங்கியது. இருப்பினும் கடைசி ஓவரின் முடிவில் 180 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது. ஐதராபாத் அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஷஷாங்க் சிங் 46 ரன்னிலும் அசுதோஷ் சர்மா 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்ற ஐதராபாத் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.