2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.
இழுபறி
2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான துபாய்க்கு மாற்ற வேண்டும் என்று பி.சி.சி.ஐ.கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வரவில்லை என்றால் போட்டியை நடத்துவதை கைவிடுவதுடன், போட்டியில் இருந்து விலகுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவான இடத்தில் போட்டி
இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் ஐ.சி.சி நடத்தப்படும் கூட்டத்தில், இந்தியாவின் மூன்று போட்டிகள், ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்பொதுவான இடத்தில் ஹைப்ரிட் மாடலில் நடக்க வேண்டும் என்றும், பொதுவான நடுநிலை நாட்டில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பி.சி.பி-க்கு முன்மொழியப்படலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த போட்டிக்காக பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பதாக ஐ.சி.சி-யிடம் இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி முழுவதையும் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடத்த பி.சி.பி விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தானில் அதிகரித்து வரும் புதிய பதட்டங்கள், இலங்கையின் கிரிக்கெட் வாரியம் அதன் ஏ அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வழிவகுத்திருக்கிறது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாப்பில்லை.
காட்டம்
இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்லுவதில் இழுபறியாக இருந்து வரும் நிலையில், கிரிக்கெட் ஆட இந்தியா வர மறுப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
“பாகிஸ்தான் அனைத்து போட்டிகளுக்காகவும் இந்தியாவில் சென்று விளையாடிக் கொண்டிருக்கும்போது, இந்திய அதிகாரிகள் தங்கள் அணியை பாகிஸ்தானில் விளையாட அனுப்பத் தயாராக இல்லை என்பது சாத்தியமில்லை. இதுபோன்ற சமத்துவமற்ற சூழ்நிலையை நாம் கொண்டிருக்க முடியாது, ”என்று நக்வி நேற்று இரவு கடாபி மைதானத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான 'ஹைப்ரிட்' மாடல் பற்றி நக்வி பேசுகையில் முன்மொழியப்பட்ட வடிவமைப்பை பி.சி.பி ஏற்காது என்று முன்னதாக அவர் வலியுறுத்தி இருந்தார். "கூட்டத்தில் என்ன நடந்தாலும் நல்ல செய்திகள் மற்றும் முடிவுகளுடன் நாங்கள் வெளிவருவோம், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நான் உறுதியளிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
டிசம்பர் 5 ஆம் தேதி ஐ.சி.சி தலைவராக பதவியேற்கும் ஜெய் ஷா, உலக கிரிக்கெட் மற்றும் அனைத்து உறுப்பினர் வாரியங்களின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பார் என்று நக்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார். "ஜெய் ஷா டிசம்பரில் பொறுப்பேற்கிறார், அவர் பிசிசிஐயிலிருந்து ஐசிசிக்கு மாறியதும், அவர் ஐசிசியின் நன்மையைப் பற்றி யோசிப்பார், அதைத்தான் அவர் செய்ய வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்தகைய பங்கை யாராவது ஏற்கும் போது, அந்த அமைப்பின் நலன்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்,'' என்றும் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.