இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023ல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார். மேலும், மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்றும் பரிந்துரைத்தார்.
மும்பையில் பிசிசிஐயின் 91 வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜெய் ஷா, "ஆசியா கோப்பைக்கான நடுநிலை இடம் முன்னோடியில்லாதது அல்ல, நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தானுக்குச் செல்லும் எங்கள் அணியின் அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது. எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம். ஆனால் 2023 ஆசிய கோப்பைக்காக, போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று அவர் கூறியிருந்தார்.
ஜெய் ஷா இந்த கருத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (பிசிபி) கோபமடையச் செய்தது. இந்த விவகாரத்தில் தனது மௌனத்தை உடைத்துள்ள பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா, அவரின் சமீபத்திய பேட்டியில் கடுமையான கருத்துகளுடன் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
உருது செய்தி நிறுவனத்திடம் பேசிய ரமிஸ், பிசிசிஐ மற்றும் இந்திய அணியை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். மேலும், ஆசிய கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பாபர் ஆசாமின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.
"அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்? எங்களிடம் தெளிவான நிலைப்பாடு உள்ளது: இந்திய அணி இங்கு வந்தால் உலகக் கோப்பைக்கு செல்வோம். அவர்கள் வரவில்லை என்றால் நாங்கள் இல்லாமல் உலகக் கோப்பையை அவர்கள் விளையாடலாம்.
இந்த விவகாரத்தில் நாங்கள் ஆக்கிரமிப்பு அணுகுமுறையை கடைபிடிப்போம். எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். அது நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நடக்கும்.
2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். டி20 ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். ஒரு வருடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு பில்லியன் டாலர் பொருளாதார அணியை இரண்டு முறை தோற்கடித்துள்ளது, ”என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. அந்த ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி கைப்பற்றி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் ஆசியக் கோப்பையைத் தவிர, 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தங்கள் நாட்டில் திரும்பியதிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் திட்டமிடப்படும் முதல் ஐசிசி (ICC ) போட்டி இதுவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil