தமிழகத்தில் ஒரு மலிங்கா: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலக்கிய பெரியசாமி

Periyasamy A Fast Bowler like Malinga in TNPL: 2019 ஆம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற இளைஞர் சிறப்பாக பந்துவீசி தமிழகத்தின் மலிங்கா என்று அழைக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

By: Updated: August 17, 2019, 07:41:36 PM

TNPL’s Fast Bowler Periyasamy Resembles Malinga: 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற இளைஞர் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் தனது பந்துவீச்சு முறையால் தமிழகத்தின் மலிங்கா என்று அழைக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கத்தில் நேற்று முன் தினம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதினார்கள். முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சசிதேவ் 44 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் வேகப்பந்துவீச்சாளர் பெரியசாமி. இவருடைய பந்து வீச்சு திறன் பலரையும் வியக்கவைத்தது. இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் ஓவர் மற்றும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல. இந்த தொடரில் அவர் ஒட்டுமொத்தமாக 21 விக்கெட்டுகளைப் கைப்பற்றியிருந்தார். பெரியசாமி இறுதிப்பொட்டியில் ஆட்ட நாயகன் விருது மட்டுமில்லாமல் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

யார் இந்த பெரியசாமி?

சேப்பாக்கம் கில்லீஸ் அணியில் விளையாடும் பெரியசாமி சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கணேசன் – காந்தாமணி தம்பதியினரின் 3-வது மகன். லாரி ஓட்டுனரான கணேசன் உடல்நிலை காரணமாக, வீட்டிலேயே தேநீர் கடை நடத்தி வருகிறார். பெரியசாமியின் தாய் வீட்டில் ஆடுமாடுகளை வளர்த்து வருகிறார். ஏழ்மையான குடும்பச் சூழலில் பிறந்த பெரியசாமி சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வமில்லாததால், பள்ளிக்கல்வியை பாதியிலேயே கைவிட்டுவிட்டு, ஆடு மேய்ப்பது, நெசவு செய்வது, நூல் மில் வேலைக்கு செல்வது என்று பல்வேறு வேலைகளை செய்துவந்துள்ளார். அதே நேரத்தில், கிரிக்கெட் விளையாடுவதில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதிலும், அவர் வேகப்பந்து வீசுவதில் ஆர்வத்துடன் இருந்துள்ளார். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிற இடங்களுக்கெல்லாம் சென்று விளையாடி வந்துள்ளார். இவர் தனது பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்திருக்கிறார். இந்நிலையில்தான், ஜெயப்பிரகாஷ் என்ற இளைஞர் பெரியசாமிக்கு பந்து வீச்சு பயிற்சி அளித்துள்ளார். இதன் பிறகு அவருடைய பந்துவீச்சு திறன் மேலும் மேம்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்த பெரிய சாமியின் திறமையை அறிந்து, அவர் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட பெரியசாமி டி.என்.பி.எல். தொடரில் அனைவரும் வியக்கும்படியாக பந்துவீசி அசத்தினார்.  அதிலும், அவர் பந்துவீசும் முறை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா போல விசுகிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

பெரியசாமி தனது திறமையாலும் கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் அனைவரும் வியக்கும் வண்ணம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்துவீசி தன்னை நிரூபித்துள்ளார். விரைவில் பெரியசாமி இந்திய அணியில் இடம்பிடித்து கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Periyasamy a fast bowler like malinga raised as hero in tnpl series

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X