சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ரசிகர்கள் செல்போன் எடுத்து வரலாம் என சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழகத்தில் போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எச்சரித்தன. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டை அரசியலாக்காதீர்கள் என ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று போட்டி நடைபெறவுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 4000 போலீசார் ஈடுபட்டுளளனர்.
இந்த நிலையில், போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன், கேமரா, கருப்பு கொடி, கார் சாவிகள், பைனாகுலர் என பல பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்றைய போட்டிக்கு வரும் ரசிகர்கள் செல்போனை எடுத்து வரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.