scorecardresearch

8வது புரோ கபடி லீக்: புதுமுகங்களுடன் மிரட்ட காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்!

vivo Pro Kabaddi League 2021; Preview, Squad, Expected 7 and Schedule for Tamil Thalaivas Tamil News: பி.கே.எல் தொடரின் 3 சீசன்களில் சொதப்பி வந்த தமிழ் தலைவாஸ் அணி இம்முறை புதுமுகங்களுடன் மிரட்ட காத்திருக்கிறது.

8வது புரோ கபடி லீக்: புதுமுகங்களுடன் மிரட்ட காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்!

Tamil Thalaivas Tamil News:  8-வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் நாளை புதன் கிழமை (டிசம்பர் 22-ம் தேதி) முதல் பெங்களூருவில் அரங்கேறுகிறது. இந்தியாவில் நிலவிய கொரோனா தொற்று பரவலால் இந்த தொடர் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருதால் தற்போது போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ், 3 முறை சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

வழக்கமாக இந்த போட்டிகள் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெறும். ஆனால், இம்முறை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு (பயோ-பபுள்) நடைமுறைகளை பின்பற்றி ஒரே இடத்தில் (பெங்களூரு) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 சீசன்களில் சொதப்பிய தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் தொடரின் 5வது சீசனில் (2017ல்) அறிமுகமான அணி தான் தமிழ் தலைவாஸ். சென்னையை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த அணி கலந்து கொண்ட 3 சீசன்களிலும் லீக் சுற்றுறோடு திரும்பி வந்தது. அஜய் தாக்கூர், மன்ஜீத் சில்லர், ராகுல் சௌதாரி, ஷபீர் பாபு, ரன் சிங் மற்றும் மோஹித் சில்லர் போன்ற முன்னணி வீரர்கள் இந்த அணி சார்பில் களமாடியும், அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தான் தக்க வைத்தது.

புதுமுகங்களுடன் இம்முறை…

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஏலத்தில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் நிர்வாகம், பிரபலமான முகங்களுக்குப் பதிலாக, ஆற்றல்மிக்க இளம் வீரர்களைச் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தியது.

அதன்படி, தமிழ் தலைவாஸ் அணி 7 புதிய வீரர்களை வாங்கி குவித்தது. இதில் பி பிரிவு ரைடர் எம்எஸ் அதுல் என்ற வீரரை ரூ .30 லட்சத்திற்கு வாங்கியது. கேரளாவைச் சேர்ந்த அதுல், ஏலப் பட்டியலில் பி பிரிவு ரைடர் ஆக உள்ளார். இவர் முன்பு தொடரின் 6வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்று இருந்தார்.

சி பிரிவு ரைடர் அஜிங்க்யா பவார் ரூ .19.5 லட்சத்திற்கும், சி பிரிவு ஆல்-ரவுண்டர் சவுரப் பாட்டீல் ரூ .15 லட்சத்திற்கும் அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்டனர். மேலும், சந்தபனசெல்வம் ( சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாகர் கிருஷ்ணா (சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாஹில் (சி பிரிவு டிபெண்டர்), மற்றும் பவானி ராஜ்புத் (சி பிரிவு ரைடர்) ஆகியோரை 10 லட்சம் கொடுத்து வாங்கியது.

தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே ரூ. 2.38 கோடி செலவில் 3 இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கியது. அவர்களில் மன்ஜீத் மற்றும் பிரபஞ்சன் முறையே ரூ .92 லட்சம் மற்றும் ரூ .71 லட்சங்களுக்கு வாங்கப்பட்டனர். அதே நேரத்தில் சுர்ஜீத் சிங்கை ரூ .75 லட்சத்திற்கு வாங்கினர்.

எழுச்சி பெற புதுத்திட்டம்…

கடந்த 3 சீசன்களில் செம அடி வாங்கிய தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, அணி புதுமுகங்களுடனும், புதிய யுத்தியுடனும் களமிறங்குகிறது. அணியை சுர்ஜீத் சிங் வழிநடத்த அவருடன் இளம் வீரர்கள் பயணிக்க தயாராக இருக்கின்றனர்.

அணியில் இடதுபக்க கார்னர் வீரராக சாகர் கிருஷ்ணாவும் வலது பக்க கார்னரில் சந்தப்பன செல்வவும் இடப்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி கவர் பொசிஷனில் புதிய இளம் வீரர் ஆஷிஷ் மாலிக் இடம் பெற வாய்ப்புள்ளது.

ரைய்டிங்கை பொறுத்தவரை பெங்கால் வாரியர்ஸ் அணியில் கலக்கி வந்த பிரபஞ்சன் முன்னணி ரைடராக இருப்பார். மஞ்சீத் தஹியா மற்றும் அஜிங்க்யா பவார் ஆகியோரும் ரைய்டிங்கில் வலு சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம். எம்.எஸ் அதுல், சௌரப் பாட்டீல் மற்றும் பவானி ராஜ்புத் போன்ற பரிச்சயமான முகங்களும் ரைடில் அசத்துவார்கள் என நம்பலாம்.

டிஃபெண்ஸில் மிரட்ட காத்திருக்கும் கேப்டன் சுர்ஜித் சிங்

தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்ஸ், முன்னணி கவர் டிஃபெண்டரும் கேப்டனுமான சுர்ஜித் சிங்கைச் சுற்றியே அமைந்துள்ளது. சுர்ஜீத் சிங் கடந்த சீசனில் நடந்த 21 ஆட்டங்களில் 63 டிஃபெண்ஸ் புள்ளிகளைப் பெற்று வெற்றிகரமான கவர் டிஃபெண்டராக வலம் வந்தார். அவர் புனேரி பால்தான் அணியில் இடம்பெறுவதற்கு முன் பெங்கால் வாரியர்ஸ் அணியை இரண்டு தொடர்ச்சியான பிளேஆஃப் தகுதிகளுக்கு வழிநடத்தியும் இருந்தார். புள்ளிவிவரப்படி, புரோ கபடி லீக் வரலாற்றில் சுர்ஜித் சிங் அதிக 5 புள்ளிகள் (27) மற்றும் ஐந்தாவது-அதிக டிஃபெண்ஸ் புள்ளிகள் (278) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

களமிறங்கும் உத்தேச அணி விவரம் பின்வருமாறு:-

மஞ்சீத் தஹியா (ரைடர்)
கே பிரபஞ்சன் (ரைடர்)
அஜிங்க்யா பவார் (ரைடர்)
ஆஷிஷ் மாலிக் (இடது கவர்)
சுர்ஜித் சிங் (வலது கவர்)
சாகர் கிருஷ்ணா (இடது கார்னர்)
சந்தானசெல்வம் (வலது கார்னர்)

தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் பட்டியல்:-

ரைடர் வீரர்கள்:

மஞ்சீத் தஹியா, கே பிரபஞ்சன், அஜிங்க்யா பவார், அதுல் எம்எஸ், பவானி ராஜ்புத், சண்டருவான் ஆசிரி

ஆல் ரவுண்டர் வீரர்கள்:

சாகர் கிருஷ்ணா, சௌரப் பாட்டீல், சந்தப்பனசெல்வம், அன்வர் சஹீத் பாபா

டிஃபெண்ஸ் வீரர்கள்:

சுர்ஜித் சிங் (கேப்டன்), ஹிமான்ஷு, மொஹம் ரதீஷ், மொஹம் ரதீஷ் துஹின் தரஃப்டர், சாஹில், ஆஷிஷ், மோஹித்

தமிழ் தலைவாஸ் அணியின் மோதும் அணிகளின் அட்டவணை பின்வருமாறு:

டிசம்பர் 22 – தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்
டிசம்பர் 24 – தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் –
டிசம்பர் 27 – தமிழ் தலைவாஸ் vs யு மும்பா
டிசம்பர் 31 – தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன்
ஜனவரி 1 – தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி KC
ஜனவரி 4 – தமிழ் தலைவாஸ் vs யுபி யோத்தா
ஜனவரி 6 – தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ்
ஜனவரி 10 – தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீல்
ஜனவரி 13 – தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ்
ஜனவரி 16 – தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
ஜனவரி 20 – தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pkl 2021 tamil news tamil thalaivas gears up with young faces