Ipl 2021: 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதன் 2வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தொடரில், டெல்லி அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், தோள்பட்டை காயம் காரணமாக நடப்பாண்டின் தொடரில் இருந்து விலகினார். எனவே அவருக்கு பதில் யாரை தேர்வு செய்யலாம் என யோசித்த டெல்லி அணி, இளம் வீரர் ரிஷாப் பண்ட்யை கேப்டனாக முன்மொழிந்தது.
தங்கள் அதிரடியில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை படைத்த ஷிகர் தவான், ரஹானே, ஸ்டீவன் சுமித் போன்ற மிக பெரும் பட்டாளத்தை கொண்டுள்ளது டெல்லி அணி. அப்படி இருக்கையில் அந்த அணி ஏன் இளம் விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்ட்யை கேப்டனாக முன்மொழிந்தது. அவரிடம் உள்ள எந்த பண்பு அந்த அணியின் தேர்வாளர்களை ஈர்த்தது என்பது போன்ற பல கேள்விகளுக்கு சுருக்கமாக இங்கு விடை காண முயன்றுள்ளோம்.
விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்டின் இந்திய அணி வருகை மிக சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் அவரின் சமீபத்திய பதிவுகள் அசத்தியமானவையாக உள்ளன. 19 வயதிற்கான இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து கவனம் ஈர்த்த பண்ட், டி-20 இந்திய அணியில் இடம் பிடித்தார். களமிறங்கிய போட்டிகளில் எல்லாம் அதிரடி காட்டிய பண்ட், கடந்த 2020 ஆண்டு நடந்த தொடரிகளில் சொதப்ப துவங்கினார். அதனை தொடர்ந்து நடந்த 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளிலும் பெரிதும் சோபிக்கவில்லை. அந்த தொடரில் 14 போட்டிகளில் களம் கண்ட பண்ட் 343 ரன்கள் சேர்த்திருந்தார். மேலும் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார்.
தொடர்ந்து சோதனைகளையும், விமார்சனங்களையும் தூக்கி சுமந்த பண்ட், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து கழட்டி விடப்பட்டார். மேலும் அங்கு நடந்த டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்புக்கு வழங்கப்படவில்லை. இதனால் கோபப்படமால் பொறுமை காத்த பண்டிற்கு டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் இடம் கிடைத்தது. ஏனென்றால் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படு தோல்வியை சந்திருந்தது.
கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என நினைத்து கடுமையாக போராடிய பண்ட், வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை கைப்பற்ற பாடுபட்ட முக்கிய வீரர்களில் ஒருவரானார். தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் சிறப்பாக ஆடி, மீண்டும் அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார்.
தடைக்கற்களை படிக்கற்களாக்கிய ரிஷாப் பண்ட் தற்போது டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவரை, அவரின் முதல் போட்டியிலே செயல்படுகள் குறித்த விமர்சனங்களை அடுக்கி விட கூடாது. தொடந்து அந்த அணியின் வெற்றிக்கு கடினமாக உழைப்பேன் என்று கூறியுள்ள பண்ட், ‘அணியின் சீனியர் வீரர்களான ஷிகர் தவான், அஸ்வின், ரஹானே ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பீல்டிங் உள்ளிட்ட வியூகம் அமைப்பதில் முடிவு மேற்கொள்வேன்’ என்று கூறியுள்ளார்.
இதுவரை பல தரப்பட்ட விமர்சனங்களையும், சீண்டகளையும் கடந்து வந்துள்ள பண்ட், இந்தாண்டு நடைபெறவுள்ள தொடரில் அதே விமர்சனங்களையும், சீண்டகளையும் சேர்த்து சுமப்பாரா அல்லது அவற்றை தவிடு பொடியாக்கி ஜொலிப்பாரா எனபதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)