33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமாக இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த நிலையில், வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PM Modi reacts to Vinesh Phogat’s disqualification, asks IOA president PT Usha to lodge protest
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
ஆறுதல்
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை தவற விட்ட வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். தற்போதைய பின்னடைவு வேதனை அளிக்கிறது.
என் வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு என்பது எனக்கு தெரியும். இளம் தலைமுறையினருக்கு வினேஷ் போகத் உந்துசக்தியாக இருக்கிறார். வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.
உத்தரவு
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) தலைவர் பி.டி. உஷாவிடம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் வழக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து பேசினார். மேலும், வினேஷிற்கு உதவும் வகையில், அவரது தகுதி நீக்கம் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்குமாறு ஐ.ஓ.ஏ தலைவருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாரிஸின் சாம்ப் டி மார்ஸில் இன்று புதன்கிழமை இரவு நடக்க இருந்த 50 கிலோ மல்யுத்தத்தில் தங்கப் பதக்கப் போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்ட்டை இந்தியாவின் 29 வயதான வினேஷ் போகத் எதிர்கொள்ள இருந்தார். ஆனால், எடை அதிகமாக இருந்ததன் காரணமாக அவர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து மக்களவையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், “இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்-ன் எடை கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பாரிஸில் இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வினேஷ் போகத்-க்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சொன்னார். வினேஷ் போகத் உடன் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகளை அனைத்தையும் மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது” என்று கூறினார்.
2016 ரியோ ஒலிம்பிக் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கால் இறுதியுடன் தோல்வியுற்ற வினேஷ், நேற்று செவ்வாயன்று இறுதிப் போட்டிக்கு அசத்தினார். வினேஷ், முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, கால் இறுதி மற்றும் அரையிறுதியில் முறையே உக்ரைனின் ஒக்ஸானா லிவாச் மற்றும் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“