விராட் கோலி தலைமையிலான வலிமையான இந்திய கிரிக்கெட் அணியை, டிவென்டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் வீழ்த்த, வெஸ்ட் இண்டீஸ் அணி அனுபவ வீரர்களின் உதவியை நாடியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வியூகம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கிரிக்கெட் ரசிகர்கள், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை விட, வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடும் போட்டியை அதிகம் விரும்பி பார்ப்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு ஒரு அர்ப்பணிப்புடன் அவர்கள் விளையாடுவர். அவர்கள் விளையாடும் விதம், கிரிக்கெட் விளையாட்டே பிடிக்காதவர்களையும், அந்த விளையாட்டை பார்க்க தூண்டும் அளவிற்கு இருக்கும்.
தற்போதைய அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் கருத்து வேறுபாடு, சரியாக சம்பளம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபகாலமாக போட்டிகளில் சொதப்பிவருகிறது. இதனை அனைவரும், நடந்துமுடிந்து உலககோப்பை கிரிக்கெட் தொடரிலேயே பார்த்திருக்கலாம். திறமையான வீரர்கள் இருந்தபோதிலும், அந்த அணியால், உலககோப்பை தொடரின் அரையிறுதிக்குக்கூட முன்னேற இயலவில்லை.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 2 டிவென்டி20 போட்டிகள், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
பொலார்ட், நரேன் இஸ் பேக்
டிவென்டி 20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ரோன் பொலார்ட் மற்றும் சுனில் நரேன் சேர்க்கப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டில் நடந்த உலககோப்பை டுவென்டி 20 தொடருக்கு பிறகு இவர்கள் விளையாடவில்லை
டிவைன் பிராவோ, சம்பள விவகாரம் தொடர்பாக, கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2014ல் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் உலககோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.
சுனில் நரேன், கடைசியாக 2017 செப்டம்பர் மாதத்தில் தேசிய அணியில் விளையாடியுள்ளார். இவரின் பந்துவீச்சு தொடர்பான சர்ச்சை காரணமாக பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டார். இதன்பின்னர், இவர் தனது பவுலிங் ஆக்சனை மாற்றிக்கொள்ள சம்மதித்ததன் பேரில், மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
கிறிஸ் கெயில்
அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், தற்போது கனடா குளோபல் டி20 தொடரில் விளையாடி வருவதால், இந்தியாவிற்கெதிரான டி20 தொடரில் இடம்பெறவில்லை. ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆண்ட்ரூ ரசல்
முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டு வந்த ரசல், தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். நான்காண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல், கடந்த 3 ஆண்டுகளில் அவர் ஒரே ஒரு டி20 தொடரில் மட்டுமே (2018ல் வங்கதேசத்திற்கு எதிரான தொடர்) பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரர்களின் பங்களிப்பு என்ற வியூகம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....