சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் 45- வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற செஸ் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, அர்ஜூன் கல்யாண், ஸ்ரீநாத் நாராயணன் ஆகிய ஐந்து பேருக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களான இந்த ஐந்து பேருக்கும் அப்பள்ளி நிர்வாகம் சார்பாக ரூபாய் 40 லட்சம் ஊக்குவிப்பு நிதியாக பிரித்து அளிக்கப்பட்டது.
அத்துடன் செஸ் போட்டியை மாணவர்களிடையே அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் சிறப்பு மாணவர்களுக்கு ஆயிரம் செஸ் போர்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஐந்து செஸ் வீரர்களின் பெற்றோர்களும் மேடையில் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும், செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்றதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டது. பின்னர் செஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாக்சிங் பஞ்ச், பலூன் வெடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, “இந்திய அணிக்காக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றதை ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கிறோம். முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கூட்டு அணியாகவும், மகளிர் அணியாகவும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளோம்.
கூட்டு அணியாக 11 போட்டிகளில் 10 போட்டியில் வென்றுள்ளோம். செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கத்துடன் வென்றுள்ளோம் என்பது பெரிய சாதனைதான். கடந்த சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இறுதியில் வந்து தங்கப்பதக்கத்தை தவறவிட்டோம். அப்போது வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தோம்.
தற்போது கூட்டு முயற்சியுடன் ஒற்றுமையாக விளையாடி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளோம். செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் தற்போது நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஒலிம்பிக் போன்ற ஒரு போட்டிதான்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“