உலகக் கோப்பை செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா தனது வெற்றி பயணத்தை குறித்து பேசியுள்ளார்.
உலகக் கோப்பை செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா அளித்த பேட்டி பின்வருமாறு ´எல்லோருக்கும் வணக்கம். செஸ் உலகக் கோப்பை நடந்து முடிந்தது. அதில் நான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன். இறுதிப் போட்டியில் டை பிரேக்கர் சுற்றில் நான் தோல்வியடைந்தேன். ஆனால் ஒட்டுமொத்தமாக நான் விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த விளையாட்டின் முக்கிய நோக்கமே, candidate போட்டிக்கு தகுதி பெறுவதுதான். அதில் நான் தகுதி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியை தருகிறது. ஆனந்த் சார், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இன்னும் நிறைய நபர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதற்கு மிகவும் நன்றி. நிறையபேர் இந்த போட்டியை பார்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது. இதனால் நிறையபேர் செஸ் விளையாட்டை விளையாட வருவார்கள். செஸ் இன்னும் பிரபலமாகும். Candidates போட்டி அடுத்த வருடம் ஏப்ரலில் நடைபெறும் என்று சொல்கிறார்கள். அதற்கு இன்னும் 8 மாதங்கள் நேரம் இருக்கிறது. எனக்கு தொடர்ந்து மற்ற போட்டிகள் இருப்பதால் இதில் கவனம் செலுத்த உள்ளேன். எனக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் மிகவும் நன்றி” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பிரக்ஞானந்தாவின் அம்மா பேசினார் “ என் மகன் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கால் இறுதிப் போட்டியில் என் மகன் விளையாடும் போது, என்னை புகைப்படம் எடுத்துள்ளனர். அதை யார் எடுத்தார்கள் என்பது தெரியாது. பிரக்ஞானந்தா அந்த சுற்றில் வெல்ல வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருந்தது. அந்த புகைப்படத்தை நிறைய பேர் பார்த்துள்ளீர்கள். அந்த போட்டியில் அவர் வெற்றியும் அடைந்தார். அதுமட்டும் இல்லாமல், candidate போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதுதான் மிகவும் மகிழ்ச்சி. என் மகன் செஸ் போட்டியில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் போட்டியை தொடர்ந்து பார்த்துள்ளார். அவர் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“