pragnanandha | Anand Mahindra: ‘பிடே’ (FIDE) நடத்திய உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் நடந்த இப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தோற்கடித்து உலகக் கோப்பை பட்டத்தை வென்றார். 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். எனினும், இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்பட்டது.
இதன்பிறகு, சீனாவின் ஹாங்ஷுவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் அணி போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது பிரக்ஞானந்தா இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஃபிடே கேண்டிடேட் செஸ் தொடரில் பங்கேற்க தீவிரமாக தயாராகி வருகிறார்.
இந்நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, “தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி – ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்.யு.வி 400 (XUV400) என்ற மின் வாகனத்தை பரிசாக அளிக்கவுள்ளேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எக்ஸ்.யு.வி 400 எலக்ட்ரிக் காரின் சாவி பிரக்ஞானந்தாவின் பெற்றோரிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை பிரக்ஞானந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“