மீண்டு வந்த ஃபீனிக்ஸ் பறவை: ஏ.டி.பி. சாலஞ்சர்ஸ் பட்டம் வென்ற தமிழர் ப்ரஜனேஷ் குன்னேஸ்வரன்

ஆசை தம்பி

சீனாவில் நடந்த ஏ.டி.பி. சாலஞ்சர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ப்ரஜனேஷ் குன்னேஸ்வரன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

சீனாவில் ஏ.டி.பி. சாலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. ஞாயிறன்று (நேற்று) நடந்த இதன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் ப்ரஜனேஷ் குன்னேஸ்வரன் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது சப்வாத் மோதினர். முதல் செட்டை 5-7 என இழந்த ப்ரஜனேஷ், பின் இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இறுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட்டில் 6-1 என வென்று அசத்தினார்.

ஒரு மணி நேரம், 52 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று  ஏ.டி.பி. சாலஞ்சர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதன் முதலாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த ப்ரஜனேஷ் குன்னேஸ்வரன். இந்த வெற்றியின் மூலம்,125 புள்ளிகள் கூடுதலாக பெற்று, தரவரிசையில் 85 இடங்கள் முன்னேறி இருக்கிறார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 260வது இடத்தில் இருந்த ப்ரஜனேஷ், எக்ஸ்பிரஸ் வேகத்தில் 176 வது இடத்தை கைப்பற்றியுள்ளார்.

அதுபோக, 125 புள்ளிகள் கூடுதலாக பெற்றதனால், விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் தொடரில் விளையாடுவதற்கு ப்ரஜனேஷ் தேர்வாக உள்ளார்.

தற்போது இந்திய அளவில் யூகி பாம்ப்ரி, தரவரிசையில் 83வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 115வது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ப்ரஜனேஷ் 176 வது இடத்தில் உள்ளார். இவர்கள் மூவர் மட்டும் தான் உலகளவில் ‘டாப் 200’ இடத்திற்குள் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ராம்குமார் ராமநாதனும் தமிழர் என்பது கூடுதல் தகவல்.

யார் இந்த ப்ரஜ்னேஷ் குன்னேஸ்வரன்?

சென்னையைச் சேர்ந்த 28 வயதான ப்ரஜ்னேஷ் குன்னேஸ்வரன், இடது கை டென்னிஸ் ஆட்டக்காரர். இதுவரை நான்கு முறை ITF தொடரில் ஒற்றையர் பிரிவில் டைட்டில் வென்றிருக்கிறார். அதேபோல, ITF தொடர் இரட்டையர் பிரிவில் ஒருமுறை டைட்டில் வென்றுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு இந்திய டேவிஸ் கோப்பை அணிக்காக ப்ரஜ்னேஷ் விளையாடி இருக்கிறார்.

ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் இவரது சிறந்த தரநிலை 176வது இடமாகும். இரட்டையர் பிரிவில் இவரது சிறந்த தரநிலை 288வது இடமாகும்.

‘Hard Surface Court’ல் விளையாடுவதையே ப்ரஜ்னேஷ் அதிகம் விரும்புவார். தற்போது வென்றுள்ள ஏ.டி.பி. சாலஞ்சர்ஸ் டென்னிஸ் கோப்பை கூட, Hard Surface Court’ல் விளையாடியது தான். அதேபோல், ஏ.டி.பி. சாலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை டைட்டில் வென்ற போது கூட, ஒரு போட்டி Hard Surface Court’ல் நடந்தது. மற்றொரு டைட்டில் ‘Carpet Surface Court’ல் விளையாடப்பட்டது.

விளையாட்டில் மட்டுமல்லாது, படிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். லண்டனில் தற்போது ‘Business Administration’ படித்து வரும் ப்ரஜ்னேஷ், இந்தாண்டு தனது இறுதித் தேர்வை எழுத உள்ளார். ஒரு பக்கம் படிப்பு, மறுபக்கம் விளையாட்டு என இரண்டையும் ‘Well Balancing’ செய்து வருகிறார்.

ஜூனியர் லெவலில் ஆடிய போது, இந்தியாவுக்காக டென்னிஸ் போட்டிகளில் பதக்கங்களை குவிப்பவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரஜ்னேஷ், எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தின் காரணமாக, முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, தீவிர முயற்சி மேற்கொண்டு, காயத்தை வென்று, மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். ஆனால், பெரும்பாலும் தோல்விகளே மிஞ்சியது. தற்போது அந்த தோல்விகளை எல்லாம் தகர்த்து எறிந்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

நாட்டுக்காக எப்போதும் விளையாடுவதே எனது கனவு என கூறும், ப்ரஜ்னேஷ் வருங்காலத்தில் பல பட்டங்களை வெல்ல வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close