கேரள மாநில அரசு மற்றும் கேரள பேட்மிண்டன் (ஷட்டில்) சங்கத்தால் (கே.பி.எஸ்.ஏ) தன்னை தரக்குறைவாக நடத்தியதால் மனமுடைந்து, சாம்பியன் ஷட்லர் ஹெச் எஸ் பிரணாய், கேரளாவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு மாற முடிவு செய்துள்ளதாக சனிக்கிழமை தெரிவித்தார்.
31 வயதான பிரணாய் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற உடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார். 1982-ம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சையத் மோடி வெண்கலம் வென்ற பிறகு, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
ஆகஸ்ட் மாதம் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப் உலக சாம்பியன்ஷிப் 2023-ல் பதக்கம் வென்றபோது, மாநில விளையாட்டுத் துறை அல்லது கேரள பேமிண்டன் ஷட்டில் சங்கம் (கே.பி.எஸ்.ஏ) அதிகாரிகள் தனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பக்கூடவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
பாங்காக்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய பிரணாய், மே, 2022-ல் கே.பி.எஸ்.ஏ அறிவித்த ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஒற்றையர் மற்றும் குழுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆனால், மாநில அரசு அவருக்கு ரொக்கப் பரிசை வழங்குவதில் வெளிப்படையாக மௌனம் சாதித்தது.
நாட்டிலேயே உயர் தரவரிசையில் உள்ள ஆண்கள் ஒற்றையர் பிரிவு வீரரான பிரணாய், “கேரளாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள விளையாட்டுத் துறையினர் எனக்கு இழைக்கப்பட்ட மோசமான நடத்தையை என்னால் இனி தாங்க முடியாது” என்று கூறினார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு, கே.பி.எஸ்.ஏ-விடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுள்ளார். காயம் காரணமாக, அவர் அக்டோபர் 26 முதல் நவம்பர் 9 வரை கோவாவில் நடைபெறவிருந்த 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். பிரணாய், அடுத்த சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இருந்து தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“