ஐ.பி.எல் தொடரில் ஆடி வரும் அணி பஞ்சாப் கிங்ஸ். கடந்த 2008ல் ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டது பஞ்சாப் விளையாடி வருகிறது. இதுவரை 17 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை ஒருமுறை கூட பஞ்சாப் கிங்ஸ் கோப்பை வென்றதில்லை. இருப்பினும், ஒரு முறை இறுதிப்போட்டிக்கும், ஒரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது. ஆனால், சாம்பியன் பட்டம் மட்டும் இன்னும் எட்டாக் கனியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஐ.பி.எல் 2025 தொடருக்கு முன்னதாக பஞ்சாப் அணி மிகப் பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது. அந்த அணி தொடர்பான வழக்கு இப்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனால், பஞ்சாப் அணி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முகமாக திகழ்ந்து வருபவர் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இதுவரை ஒருமுறை கூட தனது அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும், அணிக்கு தனது முழு ஆதரவை வழங்கி வருகிறார். அவர் மைதானத்தில் எப்போதும் இருப்பதை பார்த்து விட்டு அவர்தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் எனப் பலரும் நினைப்பதுண்டு.
அவர்கள் நினைப்பது சரி என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இன்னும் சில உரிமையாளர்கள் உள்ளனர். அதாவது கோ-ஓனர் என அழைப்பார்களே, அதுபோல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நெஸ் வாடியா, மோகித் பர்மன், கரண் பால் ஆகியோரும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுடன் உரிமையை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவர்களில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இருவரும் தலா 23 சதவிகித பங்குகளை வைத்துள்ள நிலையில், மோகித் பர்மன் 48 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். மீதமுள்ள 6 சதவிகித பங்குகளை கரண் பால் வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது மோகித் பர்மனிடம் உள்ள 48 சதவிகித பங்குகளில் 11.5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் தான், மோகித் பர்மன் அவரது பங்குகளை விற்பதை எதிர்த்து ப்ரீத்தி ஜிந்தாவின் ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், மோகித் பர்மன் தனது பங்குகளில் 11.5 சதவீதத்தை அமெரிக்காவில் உள்ள டோமால்ஸ் பே கேபிடல் எல்.பி எனும் நிறுவனத்திற்கு விற்க விரும்புவதாகவும், அதனை அவர் விற்பனை செய்யக் கூடாது. அது சட்டப்படி தவறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் உரிமையாளர்களிடையே உள்ள உள் ஏற்பாடுகளின்படி, "பங்குகளை விற்பனை செய்ய நினைக்கும் எந்தவொரு உரிமையாளரும் முதலில் துணை உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும். தற்போதைய உரிமையாளர்கள் அதை வாங்க மறுத்தால் மட்டுமே பங்குகளை வெளி தரப்பினருக்கு விற்க முடியும். மிக முக்கியமாக, பங்குகளை விற்பதற்கான வாய்ப்பானது திறந்த நிலையில் இருக்க முடியாது, அது எப்போதும் காலக்கெடுவைக் கொண்டு இருக்க வேண்டும். விற்பனையாளர் வேறு எங்கும் பார்க்கும் முன் சக உரிமையாளர்களுக்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே காத்திருக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“