17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, ரஜத் படிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணிந்தயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. இந்த தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா விளையாடினார்.
ஐ.பில்.எல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்காத நிலையில், அதற்கு பதிலடியாக இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கபட்டது. அவர் 9 போட்டிகளில் விளையாடி 197 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் மீண்டும் பிரித்வி ஷா மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் பிரித்வி ஷா. இதனால், மனமுடைந்துள்ள அவர் தனது ஏமாற்றத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
25 வயதான பிரித்வி ஷா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்காக கடைசியாக ஆடினார். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் அவர் பெரிதும் சோபிக்காத நிலையில், அவரால் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.
இருப்பினும், முதல் தர போட்டிகளில் அவர் படைத்த சாதனை பல ஆண்டுகளாக தனித்து நிற்கிறது. அவர் 65 ஆட்டங்களில் 55.72 என்ற அனைத்து இந்திய பேட்டர்களிலும் நான்காவது சிறந்த சராசரியைப் பெற்றுள்ளார். இந்திய வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட் (58.16), விராட் கோலி (57.05), சேதேஷ்வர் புஜாரா (57.01) ஆகியோர் அவரை விட முன்னிலையில் உள்ளார்கள்.
2020-21 விஜய் ஹசாரே டிராபி சீசனில், அவர் மும்பையை நான்காவது பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவரது தலைமைப் பொறுப்புகளைத் தவிர, பிரித்வி ஷா 827 ரன்களுடன் பேட்டிங் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தினார். இதில் அவர் குவித்த சிறந்த 227 ரன்களும் அடங்கும்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரித்வி ஷா, 'சொல்லு கடவுளே, நான் இன்னும் என்ன பார்க்க வேண்டும்.. 65 இன்னிங்ஸ்கள், 126 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 55.7 சராசரியில் 3399 ரன்கள் எடுத்தும், நான் போதுமானவாக இல்லையா. ஆனால் நான் உங்கள் மீதும் நம்பிக்கையுடன் இருப்பேன். இன்னும் என்னை நம்புங்கள். ஏனென்றால் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.. ஓம் சாய் ராம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபரில், மும்பையின் இரானி கோப்பை வெற்றிக்குப் பிறகு, பிரித்வி ஷா தனது உடற்தகுதியை மேம்படுத்த வேண்டும் என்று கூறி ரஞ்சி டிராபி போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.