Tamil Thalaivas vs Dabang Delhi KC, vivo Pro Kabaddi League Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும், மற்ற நான்கு அணிகள் எலிமினேட்டரில் போட்டியிடும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியில் போட்டியிடுவார்கள்.
இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் இன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பட்டியலில் தலைவாஸ் அணி 53 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தற்போது 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான அதன் கடைசி ஆட்டத்தில் 42-39 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றது. இந்த ஆட்டத்தில் நரேந்தர் ஹோஷியார் மற்றும் அஜிங்க்யா பவார் ஆகியோர் தங்கள் அணிக்காக முறையே 13 மற்றும் 12 புள்ளிகள் சேகரித்து, சிறப்பாக விளையாடினார்கள்.
மறுபுறம் தபாங் டெல்லி அணி அதன் கடைசி ஆட்டத்தில் 49-52 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. விஜய் மாலிக் மற்றும் நவீன் குமார் ஆகியோர் டெல்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பெங்களூரு புல்ஸ் அணியின் பாரத் தபாங் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மொத்தம் 23 புள்ளிகளைக் குவித்து ஜொலித்தார்.
நடப்பு சீசனில் நாக் அவுட் இடங்களுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் தலைவாசும் தபாங் டெல்லியும் தொடர்ந்து முன்னேற நினைப்பார்கள். 51 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கும் தபாங் டெல்லி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பட்டியலில் மேலும் முன்னேற முயலும். அதேவேளையில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு, தங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே தமிழ் தலைவாஸ் தீவிரம் காட்டுவார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் 37 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்ததால் இந்த போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil