Patna Pirates vs Tamil Thalaivas match highlights in tamil
Pro Kabaddi 2022, Patna Pirates vs Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
Advertisment
இந்நிலையில், நேற்று புனேயில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 33-33 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் வீரர் நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார். இதேபோல், அதிரடி ரைடர் அஜிங்க்யா பவார் 1 போனஸ் புள்ளியுடன் 6 புள்ளிகளை எடுத்தார். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
பவன் ஷெராவத் காயம் - பயிற்சியாளர் விலகல்… ஆனாலும் மிரட்டும் தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரில் களமாடி வரும் தமிழ் தலைவாஸ் அணி அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவர் காயத்தில் இருந்து விரைவில் மீள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் ஜெ உதயகுமார் சொந்த காரணங்களால் அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக அஷன் குமார் புதிய பயிற்சியாளராக அணியில் இணைந்துள்ளார்.
பவன் ஷெராவத் காயம், பயிற்சியாளர் விலகல் என தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்தடுத்த தடைகள் வந்தாலும், தற்போது அதை உடைத்தெறிந்து வருகிறது. அணியின் வளர்ச்சியை புதிய பயிற்சியாளராக இணைந்துள்ள அஷன் குமாருக்கு முன் பின் என இரண்டு பகுதிகளாக பிரிக்கும் அளவிற்கு அணி வீரர்கள் படு சூட்டாக பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்.
அஷன் குமார் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றதற்குப் பின் தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளில் தான் தோல்வியுற்றது. அதுவும் குறைந்த வித்தியாசத்தில் தான். தற்போது 14 போட்டிகளில் 5ல் வெற்றி, 6ல் தோல்வி என 38 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.