Advertisment

ப்ரோ கபடி: டாப் ரைடருக்காக முட்டி மோதும் 4 அணிகள்

இந்த சீசன் ஏலத்திற்கு முன்னதாக நட்சத்திர வீரரான பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி கழற்றி விட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pro Kabaddi 2023 Auction: 4 teams which need lead raider in tamil

கடந்த சீசனில் ஜெய் பகவான் மிகவும் சிறப்பாக இருந்தார். ரெய்டு தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை யு மும்பா அவரிடம் ஒப்படைக்கலாம்.

Pro Kabaddi 2023 Auction Tamil News: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பல திறமையான வீரர்களும், பல புதிய வீரர்களும் பதிவு செய்ய உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சீசனுக்கு முன்னதாக ஒப்பந்தத்தை இழந்த வீரர்களும் ஏலத்தில் இடம்பெறுவார்கள்.

Advertisment

இந்த ஏலத்திற்கு முன்னதாக, தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றி விடப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. பெரும்பாலான அணிகள் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ஆனால் பின்வரும் 4 அணிகளும் தங்களது சிறந்த ரைடர்களை விட்டுவிட்டனர். அதாவது அவர்கள் தங்களுக்கான முன்னணி ரைடரை ஏலத்தில் தேடுதல் வேட்டை நடத்தி கண்டுபிடிக்க உள்ளனர்.

  1. ஹரியானா ஸ்டீலர்ஸ்

புரோ கபடி லீக்கின் முந்தைய பதிப்பில் தங்கள் ரெய்டு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய மஞ்சீத் தஹியாவை ஹரியானா ஸ்டீலர்ஸ் கைவிட்டுள்ளது. அதிக ரெய்டு புள்ளிகள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த போதிலும், அந்த அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலில் மஞ்சீத் இடம் பெறவில்லை.

ஹரியானா அணி கே பிரபஞ்சனை தங்கள் ரெய்டிங் பிரிவில் தக்கவைத்துள்ளது. பிரபஞ்சன் லீட் ரைடராக இருக்க முடியும், ஆனால் மற்ற ரைடர்களுக்கு ஆதரவாக இருக்கும் போது அவர் சிறப்பாகவும் விளையாடியுள்ளார். எனவே, அந்த அணி ஏலத்தில் ஒரு முன்னணி ரைடரைத் தேடும்.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விகாஷ் கண்டோலா இந்த ஆண்டு ஏலத்தில் உள்ளார். ஒருவேளை, ஸ்டீலர்ஸ் ஏலத்தில் அவரை மீண்டும் கையொப்பமிட முயற்சி செய்யலாம்.

  1. தெலுங்கு டைட்டன்ஸ்

புரோ கபடி லீக்கின் கடந்த சில சீசன்களில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ரசிகர்களைக் கவரத் தவறிவிட்டது. ராகுல் சவுதாரி உரிமையை விட்டு வெளியேறியதில் இருந்து, அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்த போராடி வருகிறது.

ராகுல் வெளியேறிய பிறகு அணியின் புதிய முன்னணி ரைடராக சித்தார்த் தேசாய் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் காயம் பிரச்சினைகள் அவரை அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை. தெலுங்கு டைட்டன்ஸ் கடந்த ஆண்டு அபிஷேக் சிங் மற்றும் மோனு கோயத் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது, ஆனால் இரு ரைடர்களும் ஈர்க்கத் தவறினர்.

இந்த சீசனுக்கு முன்னதாக டைட்டன்ஸ் தங்கள் ரெய்டிங் பிரிவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. ரஜ்னிஷ் தலால் மற்றும் வினய் ஆகியோருடன் உறுதியான கூட்டாண்மையை உருவாக்கக்கூடிய ரெய்டர்களின் பட்டியலிலிருந்து அவர்கள் ஒரு பெரிய பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

  1. யு மும்பா

ப்ரோ கபடி 2023 ஏலத்திற்கு முன்னதாக ஜெய் பகவான், ஹெய்தரலி எக்ராமி, ஷிவம், பிரனய் ரானே, ரூபேஷ் மற்றும் சச்சின் ஆகிய ஆறு ரைடர்களை யு மும்பா தக்கவைத்துள்ளது. சீசன் 2 சாம்பியன்களுக்கு அனுபவம் வாய்ந்த வீரர் தேவை. அவரால் இந்த இளம் வீரர்களை ரெய்டு தாக்குதலில் வழிநடத்த முடியும்.

கடந்த சீசனில் ஜெய் பகவான் மிகவும் சிறப்பாக இருந்தார். ரெய்டு தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை யு மும்பா அவரிடம் ஒப்படைக்கலாம், ஆனால் அணி நிர்வாகம் முதலில் ஏலத்தில் ஒரு பெரிய பெயரை கையெழுத்திட முயற்சிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், பிகேஎல்லின் 10வது பதிப்பில் ரெய்டிங் பிரிவை வழிநடத்த பகவானை கேட்கலாம்.

  1. தமிழ் தலைவாஸ்

கடந்த சீசன் ஏலத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா இடையே போரில், ரூ. 2.26 கோடிக்கு பவன் செராவத்தை வசப்படுத்தியது தமிழ் தலைவாஸ். ஆனால், அவர் களமிறங்கிய தொடக்க ஆட்டத்திலே காயமடைந்தார். போட்டி தொடங்கிய 10வது நிமிடத்தில் அணியில் இருந்து வெளியேறினார். இருப்பினும், தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த சீசனுக்கு முன்னதாக, 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்ற நட்சத்திர வீரரான பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி கழற்றி விட்டது. இருப்பினும், ஏலத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்து வரும் அவரை வசப்படுத்த தமிழ் தலைவாஸ் கடைசி வரை முயலும் என்று தெரிகிறது.

ஏனெனில், ரெய்டிங் துறையில் கடந்த சீசனில் நரேந்தர் ஹோஷியரைக் கண்டுபிடித்த நிலையில், அவருக்கு ஜோடியாக மற்றொரு ரைடரை எடுக்க வேண்டும். அதனால், அவர்கள் பவன் ஷெராவத்தை எடுத்து ஆக வேண்டும். அல்லது அவருக்கு பதிலாக பெரிய வீரரை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே, அவரை FBM கார்டு மூலம் எடுக்க தமிழ் தலைவாஸ் அணி திட்டமிட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Pro Kabaddi Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment