கடைசி நிமிடத்தில் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்! வேடிக்கையாகிப் போன 'வேங்கை'

இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் ஆட்டம் முடிவுக்கு வந்தது

புரோ கபடி லீக் தொடரில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி, கடைசி நிமிட சொதப்பலால் தனது வெற்றியை பறிக் கொடுத்துள்ளது. இதனால், ஆட்டம் சமனில் முடிந்தது.

புரோ கபடி லீக் தொடரின் 6-வது சீசன், சென்னையில் கடந்த அக்.7ம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற 127-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியை சந்தித்தது. இதில், தொடக்க முதலே, இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தன. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-14 என்று கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில், 20-20 என்று ஆட்டம் சமமானது. இதன் பின்னர் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர், அடுத்தடுத்த ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளினார். ஒரே ரெய்டில் 3 பேரை அவுட் செய்து, எதிரணியை டோட்டலாக ஆல்-அவுட்டாக்கி அதிர வைத்தார். இதனால், தமிழ் தலைவாஸின் புள்ளிகள் அதிகரிக்கத் தொடங்கியது. அவர் மட்டும் தனி ஒருவனாக 17 புள்ளிகளை குவித்து வைத்திருந்தார்.

ஆட்டம் முடிய சரியாக 60 நொடிகளே இருந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. வெற்றி அல்மோஸ்ட் உறுதியாகியிருந்தது. அந்த சமயத்தில், ரெய்டுக்குச சென்ற கேப்டன் அஜய் தாக்கூர், நேரத்தை கடத்தும் நோக்கில் யாரையும் அவுட் செய்ய முயற்சிக்காமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் தமிழ் தலைவாஸ் டெஸ்க் பகுதியில் இருந்த வீரர்களை நோக்கி வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அரியானா வீரர்கள் ஓடிச்சென்று அவரை அப்படியே மடக்கி தூக்கி தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் திகைத்துப் போன அஜய் தாக்கூர் பரிதாபமாக வெளியேறினார்.

மீதமிருந்த சில நொடித் துளிகளில், அரியானா வீரர் விகாஸ் கன்டோலா ரெய்டு மூலம் ஒரு புள்ளி எடுக்க, வெற்றிப் பெற்றிருக்க வேண்டிய ஆட்டம், 40-40 என டிராவானது.

இத்துடன் இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ‘பி’ பிரிவில் 5 வெற்றி, 13 தோல்வி, 4 டிரா என்று மொத்தம் 42 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்துடன் தமிழ் தலைவாஸ் வெளியேறியது.

25 முறை ரெய்டு சென்று அதில் 17 புள்ளிகளை குவித்து, அணிக்கு பெரும் பங்களிப்பு அளித்திருந்த கேப்டன் அஜய் தாக்கூர், இறுதிக் கட்டத்தில் வேடிக்கைப் பார்க்க, அவுட்டாகி வேடிக்கையாகிப் போனார். வெற்றியும் பறிபோனது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close