தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அட்டா (The Indian Express Adda) நிகழ்வின் விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா பங்கேற்றிருந்தார். அப்போது பல விஷயங்களை அவர் மனம் விட்டு பேசினார். அதில் சில உங்கள் பார்வைக்காக,
“பொதுவாக வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில், அங்கு கண்டிஷன்ஸ் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், தென்னாப்பிரிக்காவில் விளையாடிய பிறகும், இங்கிலாந்தில் விளையாடிய பிறகும் நாங்கள் அதிக நம்பிக்கையோடு இருந்தோம். நாங்கள் அங்கு ஜெயிக்கவில்லை என்றபோதும், எங்களது ஆட்டத்திறன் வெளிமண்ணில் கோப்பையை வெல்ல முடியும் என்ற உறுதியை எங்களுக்குள் விதைத்தது.
ஆஸ்திரேலிய தொடரைப் பொறுத்தவரை, நான் அதிகளவு ரன்கள் எடுப்பேன் என்று நினைக்கவில்லை. நான் எப்பொழுதும் என்னை தயார் செய்வதில் தான் அதிக கவனம் செலுத்துவேன். நான் எவ்வளவு சதங்கள் அடிக்க வேண்டும் என்று எண்ணுவதை விட, நான் எந்தளவிற்கு தயாராக வேண்டும் என்பதில் தான் ஆர்வம் காட்டுவேன். ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன் நாங்கள் பதட்டத்துடனே இருந்தோம். ஆனால், நம்பிக்கையோடு இருந்தோம். அதனால், அங்கு தொடரை வென்றோம்.
ஆஸ்திரேலியாவுடன் எப்போதும் விளையாடினாலும் ஸ்லெட்ஜிங் இருக்கும். ஆனால், என்னை என்ன சீண்டினாலும், நான் பதிலே அளிக்க மாட்டேன் என்பது அவர்களுக்கு தெரியும். நம்மை சீண்டுபவர்களுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும், நம்முடைய பார்ட்னரிடம் பேசினால் கூட்டணி வலுவடையும்.
நமது வீரர்களும் ஸ்லெட்ஜிங்கில் சில சமயம் ஈடுபட வேண்டியிருக்கும். ஆனால், அது எல்லை தாண்டக் கூடாது. நம்முடைய அல்டிமேட் கோல், போட்டியை வெல்வதில் தான் இருக்க வேண்டும்.
என் சிறு வயதில், நான் அதிகமாக வீடியோ கேம் விளையாடுவேன். அது என் தாய்க்கு பிடிக்காது. அப்போது, ‘நீ கடவுளை வணங்கினால், சிறிது நேரம் வீடியோ கேம் விளையாட அனுமதிப்பேன்’ என்றார். அப்படித் தான் என்னுள் ஆன்மிகம் நுழைந்தது. களத்தில் நான் அமைதியாக இருப்பதற்கு எனக்கு கடவுள் வழிபாடு மிகவும் உதவுகிறது” என்றார்.