இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா ரஞ்சி கோப்பையில், வீசிய முதல் ஓவரில் 2வது பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆல்ரவுண்டராக மாறிவிட்டதாக புஜாரா வீடியோ பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் உறுதியாக நிலைத்து நின்று விளையாடுபவர் செதெஷ்வர் புஜாரா. இவர் இதுவரை 124 இன்னிங்ஸில் சராசரியாக 49.48 ரன்கள் என 5000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
புஜாராவின் ஆட்டத்திறனை நல்ல நிலையில் தொடர்ந்து தக்கவைப்பதற்காக பிசிசிஐ அவரை 16 பேர் கொண்ட சௌராஷ்டிரா அணியில் விளையாட தேர்வு செய்தது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பந்து வீசி ஏராளமான ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக சவுராஷ்டிரா அணியில் விளையாடிய புஜாரா வீசிய முதல் ஓவரில் 2 வது பந்திலேயே உ.பி அணியின் மோஹித் ஜங்ராவை 7 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார்.
View this post on InstagramThe day when I changed my Batsman status to an All-rounder ????????
A post shared by Cheteshwar Pujara (@cheteshwar_pujara) on
புஜாரா விக்கெட் வீழ்த்திய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்ஸ்மேன் நிலையில் இருந்து ஆல்ரவுண்டராக மாறிய நாள் என்று பதிவிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு புஜாராவுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. 1947-க்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு புஜாரா பெரிய பங்களிப்பை செய்தார். எக்ஸ்பிரஸ் அட்டாவில் பேசிய புஜாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் தொடக்கத்தில் ஸ்லெட்ஜிங் பெரிய அளவில் இருந்ததை உணர்ந்தேன் என்று கூறினார்.
“ஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2017 -இல் விளையாடிய தொடர் நான் விளையாடிய கடினமான தொடர்களில் ஒன்று. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு கடினமாக இருந்தன. ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில், நான் 180 ரன்களில் பேட்டிங் செய்யும் போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீஃப் பந்து வீசிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவர் ஸ்லெட்ஜிங் செய்தார். ஆனால், இறுதியில் அவர் என்னிடம், 'நீங்கள் இப்போது வெளியேறவில்லை என்றால், நாங்கள் சக்கர நாற்காலிகள் வாங்கியிருப்போம்” என்று அவர் கூறினார்.
மேலும், “இந்த முறையும், முதல் டெஸ்டில் அடிலெய்டில் சில ஸ்லெட்ஜிங் இருந்தது. ஆனால், இறுதியில் நான் பதிலளிக்கமாட்டேன் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் பார்ட்னருடன் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் கவனம் செலுத்தும்போது, அவர்கள் உங்களை உடைக்க முடியாது.” என்று புஜாரா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.