Pro Kabaddi League Season 10 | Puneri Paltan vs Haryana Steelers PKL 10 Final: இந்திய மண்ணில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில் அரங்கேறிய இறுதிப் போட்டியில் புனேரி பல்டன் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
புனேரி பல்டன் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்
முதலாவது அரைஇறுதியில் புனேரி பால்டன் 37-21 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. மறுபுறம், 2-வது அரைஇறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் 31-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் வந்துள்ளது.
நேருக்கு நேர்
பி.கே.எல் வரலாற்றில் புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், புனேரி பல்டான் 8 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் 5 முறை வெற்றியுடன் திரும்பியுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.
இந்த சீசனில் புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதிய 2 ஆட்டங்களில் ஒன்றில் 44 -39 என்கிற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் 51-36 என்ற கணக்கில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது புனேரி பல்டன்.
இறுதிப்போட்டி விறுவிறுப்பு
ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது. இதனால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இறுதியில் புனே அணி 28-25 என்ற புள்ளி கணக்கில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“